டெஹரான், ஜூன். 30 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு மிடையே சாலைப் போக்குவரத்து மீண்டால், அப்பாதை வழியாக இந்திய வர்த்தக சரக்குகள் அதிகமாகச் செல்வதற்கான வசதிகளைப் பாகிஸ்தான் ஏற்படுத்திக் கொடுக்குமாறு செய்ய அந்நாட்டுடன் தனக்குள்ள நல்லுறவை ஈரான் அரசு பயன்படுத்தும்.
ஈரான் வெளி விவகார மந்திரி அப்பாஸ் அலி கலாட் பாரி இன்று இங்கு இத்தகவலை வெளியிட்டார். ராஷ்டிரபதி பக்ருதீன் அலி அகமதுடன் வந்துள்ள இந்திய நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதைக் கூறினார்.
சிறிது காலத்திற்கு முன்புதான் 2500 லாரிப் பளு இந்திய சரக்குகள் செல்ல பாகிஸ்தானின் அனுமதியைப் பெற ஈரான் முயன்றது. இப்போது நிலப்பாதை திறக்கப்படுகிறது. ஆகையால் இன்னும் அதிகமான இந்திய சரக்குகள் செல்வதற்கு நில வழியை ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதற்குக் காரணமில்லை என்று அவர் சொன்னார்.
தனது சாலைகள் அகலம் இல்லாதவை என்றும் பெரிய பாரங்கள் செல்வதற்கு வேண்டிய பலம் இல்லாதவை என்றும் பாகிஸ்தான் கூறி வந்தது. ஆனால் இப்போது ரயில் போக்குவரத்தும் மீண்டும் ஏற்படுவது அந்தக் கஷ்டத்தையும் போக்கிவிடும் என்று அவர் கூறினார்.
ஐரோப்பா செல்ல ஈரான் உறுதி
நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், இந்தியாவிலிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் அனுப்பக்கூடிய சரக்குகளுக்கு ஈரான் ஒரு வழியாக இருக்க முடியும்.
''பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி" அமைப்பில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சேர வேண்டும் என்று ஈரான் மன்னர் விரும்புகிறார். இது சம்பந்தமாக அதிகாரபூர்வமாக இந்தியாவுக்கு அழைப்பு எதுவும் அனுப்பப்படவில்லை. ஆனால் பூர்வாங்கமான முறையில் இது விவாதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். ...
பத்திரிகைச் சுதந்திரத்தை பறிக்கும் விருப்பமில்லை என்கிறார் பிரதம மந்திரி
புது டில்லி, ஜூன். 30 - பத்திரிகைகளின் சுதந்திரம் என்பது ஜனநாயக சுதந்திரத்தின் ஒரு பகுதி என்றும், அந்தச் சுதந்திரத்தைப் பறிக்கும் விருப்பம் தங்களுக்குக் கிடையாதென்றும் பிரதம மந்திரி இந்திரா காந்தி இன்று கூறினார்.
முப்பது வருஷ காலமாக 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை ஆசிசிரியராக இருந்து வரும் எம். சலபதி ராவைப் பாராட்டுவதற்காக நடந்த ஒரு விழாவில் பேசுகையில் பிரதம மந்திரி இவ்வாறு கூறினார்.
பத்திரிகைகள் மீது தான் தாக்குதல் ஆரம்பித்திருப்பதாகப் பிரமாதப்படுத்தப்படுவதை பற்றி அவர் வருத்தம் தெரிவித்தார். பல பத்திரிகைகள் பொறுப்பு உணர்ச்சிகளை அடியோடு தூக்கி எறிந்து விட்டன வென்றும், அதனால் தான் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதென்றும் பிரதமர் கூறினார்.
அந்தப் பத்திரிகைகள் விஷய அறிவூட்டுவதற்குப் பதிலாக, உணர்ச்சிகளைத் தூண்டி விடும் நோக்கத்துடன் நடந்து கொண்டன.
அவசரநிலைப் பிரகடனத்திற்கு முன்பு சிறிய சம்பவங்கள் கூடப்பெரிதுபடுத்தப்பட்டன. இதனால் தேசம் பலவீனமடைந்தது; மக்களின் நம்பிக்கைக்கும் தோண்டப்பட்டது.
பத்திரிகைகளின் முக்கிய ஆயதம் அதனிடமுள்ள பலமல்ல; பிரசாரம்தான் முக்கிய ஆயுதமாயிருந்தது.
பத்திரிகைகள் செயல்படும் விதம் பற்றிச் சில குறைகள் கூறப்பட்டன. தாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று முன்பிருந்த சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டவர்கள், ஒருவருடைய நற்பெயருக்குமாக கற்பித்தவர்கள் எந்தக் கட்டுப்பாட்டைப் பற்றியும் ஆத்திரப்படுவது இயற்கையே என்று பிரதம மந்திரி கூறினார். ...
Summary
29.6.1976: Iran to attempt sending more goods to India via Pakistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









