திருச்சூர், ஜூன், 2 - காவிரி நீர் பங்கீடு பற்றிய தகராறைத் தீர்ப்பதற்கான பேச்சு வார்த்தைகள் விரைவில் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று யூனியன் விவசாய, பாசன மந்திரி ஜகஜீவன்ராம் இன்று இங்கு கூறினார்.
காவிரி நீர் பங்கீடுப் பிரச்னை கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் சம்பந்தப்பட்டுள்ளதென்பது தெரிந்ததே.
திருச்சூர் மாவட்டத்தில் கொல்லை நிலங்கள் அபிவிருத்திக்கான விரிவான திட்டத்தில் ஓரம்சமான சிமோனி பாசனத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பாசன மந்திரி ஜகஜீவன்ராம் பேசினார். இத்திட்டம் ரூ. 6.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
யூனியன் மந்திரி ஜகஜீவன்ராம் அதிர்ஷ்டவசத்தினால் கிருஷ்ணா, கோதாவரி நீர்ப் பங்கீடு சம்பந்தமான பெரிய தகராறு தீர்ந்ததென்று கூறினார். நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 18 சதவிகிதம் கிருஷ்ணா, கோதாவரி பாய்வெளியில் வருகிறதென்றும், இவற்றின் கீழுள்ள பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் மிகவும் மானாவாரியாக உள்ள பகுதிகளுக்கு பாசன வசதிகள் கிடைக்குமென்றும் ஜகஜீவன்ராம் கூறினார்.
காவிரி நீர் பங்கீடு சம்பந்தமான தகராறு தீர்க்க பேச்சுவார்த்தை ஆரம்பிக்க வேண்டுமென்ற தமிழ்நாடு கவர்னர் ஆலோசகர்கள் கோரிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டு, தான் டில்லிக்குத் திரும்பியதும், மூன்று மாநிலங்களிடையில் இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்க உத்தேசித்திருப்பதாகக் கூறினார்.
காவிரியில் ஒவ்வொரு சொட்டு நீரும் பயன்படுத்தப்படுவதையும் யூனியன் மந்திரி சுட்டிக் காட்டினார். கேரளத்துக்குத் தண்ணீர் வசதி செய்து தரும் பொருட்டு, காவிரி பாசனத் திட்டத்தை நவீனப்படுத்தும் பிரச்னையைப் பரிசீலிக்க வேண்டுமென்று ஜகஜீவன்ராம் கூறினார். ...
இலங்கையில் தமிழர் முன்னணி தலைவர்கள் கைது பற்றி உரிமை பிரச்னை
கொழும்பு, ஜூன். 2- மூன்று பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் கைது செய்யப்பட்டது பற்றி நேற்று இலங்கை பார்லிமெண்டில் எதிர்க்கட்சியினர் உரிமைப் பிரச்னை எழுப்பினார்கள்.
நவரத்னம், ரத்னம், துரை ரத்னம் ஆகிய எம்.பி.க்களும், முன்னாள் எம்.பி. அமிர்தலிங்கமும் ஆகிய தமிழ் விடுதலை முன்னணி தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் மே 22ம் தேதி தனித்தமிழ்நாடு கோரி கிளர்ச்சி நடத்த வற்புறுத்தும் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்ததாக கைது செய்யப்பட்டார்கள். பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
உரிமைப் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் ஐயவர்த்தனே (ஐக்ய தேசிய கட்சி) பேசுகையில், யதேச்சாதிகார கைது காவலிலிருந்து அங்கத்தினர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு இருப்பதாகவும் அரசு கட்சித் தலைவர் எம். சேனாநாயகா கூறினார். உரிமைப் பிரச்னை பற்றி தீர்ப்பை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
Summary
Talks to Resolve Cauvery Water Dispute Soon
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ஜூனில் 9.91 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்







