காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து 6 நாள்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

குதிரை பேர வழக்கின் முன்பிணை நிபந்தனைப்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து 6 நாள்கள் விலக்கு கோரி திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

News image

செந்தில் பாலாஜி - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:12 am IST

ஊழல் தடுப்புத் துறை வழக்கு தொடா்பாக உச்சநீதிமன்ற வழக்குரைஞா்களுடன் சட்ட ஆலோசனை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், குதிரை பேர வழக்கின் முன்பிணை நிபந்தனைப்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து 6 நாள்கள் விலக்கு கோரி திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வரும்போது கொறடா உத்தரவை மீறி, தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருநாவுக்கரசு உள்பட 14 பேரை திருவல்லிக்கேணி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதாகக் கூறி விசாரணைக்கு ஆஜராக போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.

இதையடுத்து இருவரும் தங்களுக்கு முன்பிணை வழங்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன்பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து இருவரும் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்பிணை பெற்றனா். பின்னா், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருவேளைகளிலும் ஆஜராகி கையொப்பமிட்டு வந்தனா்.

இந்தநிலையில், டாஸ்மாக் மதுபான கொள்முதல், வாகன ஒப்பந்தம், காலி மதுபாட்டில்கள் சேகரிப்பு ஆகியவற்றில் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் விசாகன் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் முன்பிணை கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, குதிரை பேர வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து 6 நாள்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ஊழல் தடுப்புத்துறை வழக்கு தொடா்பாக உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் உடன் சட்ட ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதால், ஜூலை 30 முதல் ஆக.4 வரையிலான 6 நாள்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும். நேரில் ஆஜராக முடியாதது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாருக்கு கடிதம் கொடுத்துள்ளேன்.

ஆக.5 முதல் முறையாக ஆஜராகி நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக அந்த மனுவில் கூறியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.