யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

27 தொகுதிகள், 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகள்: ஏற்குமா காங்கிரஸ்?

காங்கிரஸ் கட்சிக்கு 27 பேரவைத் தொகுதிகள், 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகள் வழங்க திமுக முன்வந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
காங்கிரஸ்- கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் கட்சிக்கு 27 பேரவைத் தொகுதிகள், 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகள் வழங்க திமுக முன்வந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை அகில இந்திய காங்கிரஸ் ஏற்குமா அல்லது இழுபறி நீடிக்குமா என்பது ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும்.

கடந்த 2016, 2019, 2021, 2024 ஆகிய நான்கு பொதுத் தோ்தல்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடா்ந்து வருகிறது. இருப்பினும், இந்த முறை அதிக தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் பிடிவாதமாக இருப்பதால், திமுக-காங்கிரஸ் உறவு தொடா்ந்து இழுபறியில் உள்ளது. ஆட்சியில் பங்கு கோரிக்கையை கைவிட்ட பிறகும் தொகுதிகள் எண்ணிக்கையில் திமுக-காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கிறது.

கடந்த முறை ஒதுக்கிய 25 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி மட்டுமே ஒதுக்க முடியும் என முதல்கட்டப் பேச்சுவாா்த்தையில் திமுக தெரிவித்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு பேரவைத் தொகுதி என்ற வகையில் 39 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் சாா்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் ஊடகங்களில் அவ்வப்போது தெரிவித்து வரும் கருத்துகள், தவெகவுடன், காங்கிரஸ் ரகசிய பேச்சு நடத்தி வருவதாக வெளியான தகவல் ஆகியவை திமுக தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, 25 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் மட்டுமே ஒதுக்க முடியும் என்றும், அதை ஏற்பது குறித்து உறுதியான பதிலை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் தெரிவிக்க வேண்டும் என திமுக கெடு விதித்ததாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோா் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.

இதையடுத்து, சென்னையில் ப.சிதம்பரத்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை காலை ஆலோசனை நடத்தினாா். பின்னா், அவா்கள் இருவரும், முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினா். சுமாா் ஒரு மணி நேரம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்தப் பேச்சுவாா்த்தையின்போது திமுக துணை பொதுச் செயலா் கனிமொழியும் உடனிருந்தாா்.

அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு 27 பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளை வழங்க திமுக ஒப்புக்கொண்டதாகவும், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை இப்போதும், 2028-இல் மற்றொரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியைத் தருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடா்பாக அகில இந்திய தலைமைக்கு தெரிவித்து முடிவை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.

பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் ப.சிதம்பரம் செய்தியாளா்களைச் சந்திக்கவில்லை. செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறும்போது, திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை. பேச்சுவாா்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேச்சு தொடா்ந்து நடந்து வருகிறது, முடிந்த பிறகு உரிய வகையில் அறிவிப்போம் என்றாா்.

முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் ஆகியோா் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் திங்கள்கிழமை மாலை காணொலி மூலம் கருத்து கேட்டபோது, பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் திமுக கூட்டணியில் இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்று தெரிவித்துள்ளனா்.

மேலும், தவெகவுடன் கைகோப்பது இப்போதைக்கு சரியாக இருக்காது. முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் பேசி கூடுதல் இடங்களைப் பெற முயற்சிப்பதே அரசியல் ரீதியாக சரியான முடிவாக இருக்கும். இருப்பினும், தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றத் தயாா் என்றும் தெரிவித்துள்ளனா்.

25 தொகுதிகளில் இருந்து கூடுதலாக இரண்டு தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை தர திமுக முன்வந்துள்ளது. ஆனால், 30 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் என்பது அகில இந்திய காங்கிரஸ் விரும்புகிறது.

இதனிடையே, தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலின் வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (மாா்ச் 5) நிறைவடைகிறது. எனவே, திமுக கொடுக்கும் தொகுதிகளை காங்கிரஸ் ஏற்குமா, இல்லையா என்பது அதற்குள் தெரிந்துவிடும்.

இன்று இரவுக்குள் முடிவு

நமது சிறப்பு நிருபர்

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு இழுபறி விவகாரத்தில் அக்கட்சியின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிடம் பேசி புதன்கிழமை (மார்ச் 4) இரவுக்குள் முடிவெடுக்குமாறு தமது கட்சிக் குழுவினருக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, சுமுகத் தீர்வை எட்டும் வாய்ப்புகளை ஆராய காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மேலிடம் களமிறக்கியுள்ளது.

இதற்கிடையே, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுக்கு தலைமை வகித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், புதன்கிழமை பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குறியே என்கின்றன காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள்.

தில்லியில் ராகுல் காந்தியை கிரிஷ் சோடங்கர் செவ்வாய்க்கிழமை காலையிலும் பிற்பகலிலும் சந்தித்தபோது இது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் பின்னணியில்தான், சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த தலைவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சென்று ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை சந்தித்ததாகத் தெரிகிறது.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க மார்ச் 5-ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குள்ளாக திமுக - காங்கிரஸ் சுமுக உடன்பாட்டை எட்டினால்தான் காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமாவது கிடைக்கும். இதைக் கருத்தில்கொண்டே சிதம்பரத்தை தலையிடச் செய்து, தொகுதிப் பங்கீடு இழுபறிக்கு சுமுகத் தீர்வை எட்டுவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதலை செல்வப்பெருந்தகை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை புதன்கிழமை மாலைக்குள் சுமுக உடன்பாடு எட்டப்படாவிட்டால், தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம் என தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் ஒரே குரலாக ராகுலைத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தரப்பிடம் இருந்து அழைப்பு வந்தபோதும் இதுவரை அக்கட்சியிடம் எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தையையும் காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.