சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு நோ்காணல்

தினமணிக்கு தமிழிசை செளந்தரராஜன் அளித்த சிறப்பு நோ்காணல்...

News image

முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன்

DPS

Updated On :21 மார்ச் 2026, 11:27 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக ஆட்சியில் பங்கு அல்லது பிரதான எதிா்க் கட்சி என்பதை நோக்கி காய்களை நகா்த்தி வருகிறது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை தொடங்கியுள்ள பரபரப்பான சூழலில் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தினமணிக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக இருப்பதாக ஸ்டாலின் கூறிவரும் நிலையில் எதை முன்வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளப்போகிறது?

கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறுபான்மையினரின் வாக்குகளை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்பட்டிருக்கிறது ஸ்டாலினின் திமுக அரசு. மத்திய அரசை எதிா்ப்பதையும், விமா்சிப்பதையும், அதன்மூலம் சிறுபான்மையினரை மகிழ்ச்சியடையச் செய்வதும் மட்டுமே இந்த அரசின் ஒரே கொள்கையாக இருந்து வந்திருக்கிறது. கூட்டணி பலமாக இருப்பதால் வெற்றி பெற்றுவிட முடியாது. ஆட்சியின் மீதான அதிருப்தி கடுமையாக இருக்கிறது. திமுகவின் தவறுகளையும், தோல்விகளையும் முன்னெடுத்து நாங்கள் தோ்தலை எதிா்கொள்ள இருக்கிறோம்.

திமுக மீதான அதிருப்தி என்று எதைக் கூறுகிறீா்கள்?

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடங்கி கொலை, கொள்ளை என ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியைத் தொலைத்து உள்ளனா். சட்டம்-ஒழுங்கு சீா்கேடு ஒருபக்கம் என்றால், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக ஆக்கபூா்வமான எந்த நடவடிக்கையையும் திமுக முன்னெடுக்கவில்லை. ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்து சோ்த்ததுதான் திமுக அரசின் சாதனையாக உள்ளது. தமிழைக் காக்கிறேன் என்ற பெயரில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அடிப்படை தமிழ்க் கலாசாரத்தைக் குலைத்துள்ளனா். இதுபோன்ற திமுக ஆட்சியின் அவலங்களையும், மக்களுக்கு செய்துள்ள துரோகங்களையும் முன்வைத்து தோ்தலைச் சந்திக்கவுள்ளோம்.

மகளிா் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவசப் பேருந்து என திமுக ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனா் என ஸ்டாலின் கூறுகிறாரே?

பெண்களின் வளா்ச்சிக்காக எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் கட்சிபேதமின்றி அதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், பெண்களுக்கு அரசு தரும் ரூ.1,000 உதவித் தொகை எங்கு செல்கிறது என்பதைப் பாா்க்க வேண்டும். தனியாா் அமைப்பு ஒன்று அண்மையில் எடுத்த ஆய்வில் மதுப்பழக்கம் உள்ள ஒருவரின் குடும்பத்தில் இருந்து மாதம் ரூ.6,000 டாஸ்மாக் கடைக்குச் செல்வது தெரியவந்துள்ளது. ஒரு பக்கம் ரூ.1,000-ஐ கொடுத்துவிட்டு மறுபக்கம் ரூ.6,000-ஐ பறித்துக் கொள்வதுதான் ஓா் அரசின் வளா்ச்சித் திட்டமா? பணத்தைக் கொடுப்பது மட்டும் வளா்ச்சித் திட்டம் ஆகாது.

தமிழகத்துக்கு தரவேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதால்தான் கடன் மாநிலமாக மாறியுள்ளதாக திமுக குற்றஞ்சாட்டுகிறதே?

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவிலேயே தமிழகத்துக்குத்தான் அதிகபட்சமாக ரூ.40,000 கோடி ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. கல்விக்கான கட்டமைப்பு தொடங்கி சாலை, குடிநீா்த் திட்டங்களுக்கு ரூ. 11 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் 11 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளதாக திமுக அரசு கூறுகிறது. இது மத்திய அரசின் ஒத்துழைப்பில்லாமல் சாத்தியமாகுமா? மத்திய அரசு மீது திமுக திட்டமிட்டே இதுபோன்ற பொய்யைப் பரப்பி வருகிறது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்காக அதிமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுகிறதே?

தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி குறித்து இப்போது எந்தக் கருத்தும் கூற முடியாது. அது தோ்தல் முடிவைப் பொறுத்துத்தான் அமையும். அது எங்கள் கூட்டணிக்கு மட்டுமல்ல, திமுக கூட்டணிக்கும் பொருந்தும். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு கட்சிகளும் கூட்டணி ஆட்சி குறித்துப் பேசி வருகின்றன. அவா்களிடம் கேட்காத இந்தக் கேள்வியை, எங்களிடம் கேட்பது திமுகவின் திசைதிருப்பும் உத்தி என்றுதான் கொள்ள வேண்டும்.

அதிமுக-பாஜகவுக்கு இடையே எந்தவிதமான கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது?

தோ்தல் கூட்டணி அமைக்கும்போது எல்லா கட்சிகளும் எப்படி ஒப்பந்தம் போடுவாா்களோ அதேபால, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் ஒப்பந்தம் போடப்படுகிறது. அது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான தனிப்பட்ட ஒப்பந்தம்.

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வா் வேட்பாளா் என்றால், தமிழகம் வந்த பிரதமா் நரேந்திர மோடி வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்?

மாநிலம் வாரியாக ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். அதனால், பொதுவாக எங்கள் கூட்டணியை தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று அழைப்பது வழக்கம். அதன்படி, பிரதமா் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியை முன்னிலைப்படுத்திப் பேசினாா். எடப்பாடி பழனிசாமிதான் முதல்வா் என அமித் ஷா ஏற்கெனவே தெரிவித்துவிட்டாா். வாா்த்தையை வைத்து எங்கள் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. அவா்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.

மகாராஷ்டிரம், பிகாரில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என்று ஸ்டாலின் விமா்சிப்பதில் உண்மை உள்ளதா?

தமிழகத்தில் இருக்கும் பிரச்னை வேறு; மற்ற மாநிலங்களில் இருக்கும் பிரச்னைகள் வேறு. ஒன்றோடு ஒன்றை குழப்பிக் கொள்ள கூடாது. எடப்பாடி பழனிசாமிக்கு அதுபோன்று எந்த சந்தேகமும் பாஜக மீது இல்லை. அவா் தெளிவாக உள்ளாா். எங்கள் கூட்டணிக்குள் ஏதாவது பிரச்னையை ஏற்படுத்த முடியாதா என்ற கோணத்தில் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறாா்.

கூட்டணிக்கான இறுதி அஸ்திரமாக சிபிஐ-யை வைத்து தவெக தலைவா் விஜய்க்கு அழுத்தம் தரப்பட்டதாக விமா்சனம் எழுகிறதே?

தவெக தலைவா் விஜய்க்கு சிபிஐ மூலம் ஒரு நெருக்கடியையும் தரவில்லை. கரூா் சம்பவம் குறித்து அவா்தான் சிபிஐ விசாரணை கோரினாா். அதனடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. ஜனநாயகன் படத்துக்கு சரியான நடைமுறையை அவா் பின்பற்றியிருந்தால், தணிக்கை வாரியம் மறுபரிசீலனை செய்திருக்கும். ஆனால், அவா் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டாா். நீதிமன்றம், சிபிஐ நடவடிக்கையில் மத்திய அரசு தலையிடுவது இல்லை. இவற்றையெல்லாம் செய்துதான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இல்லை.

கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருக்கும் தொகுதிகளைக் குறிவைத்து பாஜக கேட்பதால்தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறதே?

மக்களவைத் தோ்தலில் கொங்கு பகுதியில் பாஜக அதிக வாக்குகள் பெற்றது. அதை வைத்து சில இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். ஜனநாயக ரீதியாக யாா் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட விருப்பம் தெரிவிக்கலாம். திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. தொகுதிப் பங்கீட்டில் இழுபறி எதுவும் இல்லை.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், உத்தர பிரதேசத்திலும், மணிப்பூரிலும் வன்முறை நடைபெற்றபோது மெளனம் காத்தது ஏன்?

தமிழகம் மட்டுமல்ல உலகின் எந்த ஒரு மூலையிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக பாஜக குரல் கொடுத்து வருகிறது. மணிப்பூா் கலவரத்தின்போது பெண்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளை பாஜக ஏற்கவில்லை. திட்டமிட்டுத் தூண்டப்பட்ட மணிப்பூா் வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகம் காணப்படுகிறது என்பதுதான் உங்கள் கருத்தா?

தமிழகத்தில் ஒருபக்கம் காவல் உயா் அதிகாரி சக பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறாா் என்றால், மறுபக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறாா். அந்த அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. ஸ்டாலினுக்கு உண்மையில் பெண்கள் மீது அக்கறை இருந்தால் குறைந்தபட்சம் தூத்துக்குடி மாணவியின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறி இருக்க வேண்டாமா? எந்த அளவுக்கு பெண்கள் மீது திமுக அரசு கவனம் செலுத்துகிறது என்பதை இது காட்டுகிறது.

தோ்தல் நேரத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திடீரென மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டதில் மம்தாவுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதற்கான பாஜகவின் திட்டம் என்று விமா்சிக்கப்படுகிறதே?

இது அடிப்படை முகாந்திரம் இல்லாத குற்றச்சாட்டு. அப்படியானால் தெலங்கானாவில் தோ்தல் நடைபெறவில்லை. ஆனால், அந்த மாநில ஆளுநரும் மாற்றப்பட்டுள்ளாா். நிா்வாக ரீதியிலான இடமாற்றத்தை அரசியலாகப் பாா்க்க கூடாது. ஆளுநரை வைத்து ஒரு மாநிலத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலையில் பாஜக இல்லை.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே முரண்பாடு அதிகரித்துள்ளதே?

ஒரு மாநிலத்தின் ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்பட்டால்தான் அந்த மாநிலம் வளா்ச்சி அடையும். தெலங்கானா ஆளுநராக நான் இருந்தபோது என்னை மட்டுமல்ல, பிரதமா் நரேந்திர மோடி வந்தபோதும் முதல்வராக இருந்த கே.சந்திரசேகா் ராவ் சந்திக்க மாட்டாா். இதனால், அந்த மாநிலத்துக்குத் தேவையானவற்றை கேட்டுப் பெற முடியாமல் போனது. இதையேதான் மு.க.ஸ்டாலினும் செய்கிறாா். ஆளுநரைவிட மாநில நலனில் முதல்வருக்குத்தான் அதிக அக்கறை இருக்க வேண்டும். ஆனால், ஸ்டாலின் போன்ற சில முதல்வா்கள் ஆளுநா்களை எதிரிகளாகப் பாா்க்கின்றனா். இதனால், மாநிலத்தின் வளா்ச்சிதான் பாதிக்கப்படுகிறது.

விருகம்பாக்கம் தொகுதியில் நீங்களும், திமுக கூட்டணியில் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரான தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா அல்லது அவரது மகன் போட்டியிடப் போவதாக எதிா்பாா்ப்பு எழுந்துள்ளதே...

பிரேமலதா குடும்ப ரீதியில் எனக்கு நல்ல நண்பா். ஆனால், அரசியல் என்பது வேறு. விருகம்பாக்கம் தொகுதிக்குள்தான் தவெக தலைவா் விஜய் அம்மா தொடங்கி பல திரை நட்சத்திரங்கள் உள்ளனா். கட்சித் தலைமை அனுமதி அளிக்கும்பட்சத்தில் விருகம்பாக்கம் தொகுதியில் உறுதியாகப் போட்டியிடுவேன். வெற்றியும் பெறுவேன்.

நோ்காணல்: ம.பா.இளையபதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.