8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

எதிர்பார்ப்பும்... ஏமாற்றமும்...விவசாயிகளின் நீண்டகால விருப்பம் மாங்கூழ் தொழிற்சாலை!

வேலூர் மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது நிறைவேற்றப்படாமல் இருப்பது, விவசாயிகள் "மா' விவசாயத்தையே கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது.

Published On :25 மார்ச் 2026, 5:34 am IST

- என்.தமிழ்ச்செல்வன்

வேலூர் மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது நிறைவேற்றப்படாமல் இருப்பது, விவசாயிகள் "மா' விவசாயத்தையே கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது.

44,000 மெட்ரிக். டன் உற்பத்தி: இந்திய அளவில் மா விளைச்சலில் தமிழகம் 7-ஆவது இடம் வகிக்கும் நிலையில், தமிழக அளவில் வேலூர் மாவட்டம் 7-ஆவது இடத்தில் உள்ளது. தோட்டக்கலைத் துறை கணக்குப்படி இந்த மாவட்டத்தில் சராசரியாக 5,800 ஹெக்டேர் பரப்பில் ஆண்டுக்கு 44,000 மெட்ரிக். டன் அளவுக்கு மா சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு ஆகிய வட்டாரங்களில் அதிக அளவில் மா சாகுபடி உள்ளது.

பெங்களூரா, அல்போன்சா, செந்தூரா, இமாம்பசந்த் எனப் பலவகை மாம்பழங்கள் வேலூர் மாவட்டத்தில் பெருமளவில் விளைகின்றன. இனிப்பான மாம்பழங்களை சாகுபடி செய்யும் இந்த மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கையில் மட்டும் பல ஆண்டுகளாகக் கசப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது. அதற்கு, இந்த மாவட்டத்தில் விளையும் பல்லாயிரம் டன் மாம்பழங்களை மதிப்புக் கூட்டப் போதுமான கட்டமைப்பு இல்லாததே காரணமாகும்.

ஆந்திரத்தை நம்பியிருக்கும் அவலம்... வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அறுவடை செய்யப்படும் மாம்பழங்களைப் பதப்படுத்தவோ, கூழாக மாற்றவோ உள்ளூரில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இல்லை.

இதனால், விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை அருகே உள்ள ஆந்திர மாநிலம் (குறிப்பாக சித்தூர்) பகுதிகளில் உள்ள கூழ் தொழிற்சாலைகளுக்கே கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதேசமயம், மாம்பழ சீசனான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் ஆந்திரத்திலும் மா விளைச்சல் அதிகம் இருக்கும். அப்போது, ஆந்திரக் கூழ்தொழிற்சாலைகள், தங்கள் மாநில விவசாயிகளிடமிருந்து வரும் மாம்பழங்களுக்கே முன்னுரிமை அளித்து கொள்முதல் செய்கின்றன. இதனால், வேலூர் மாவட்ட மாம்பழங்கள் பல நாள்கள் லாரிகளிலேயே காத்திருக்க வேண்டிய சூழலும், அழுகும் நிலையில், பின்னர் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய துயர நிலைக்கும் வேலூர் விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.

மாங்கூழ் தொழிற்சாலை... இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க வேலூர் மாவட்டத்திலேயே கூட்டுறவு அடிப்படையில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையாகும். இதன்மூலம், சீசன் காலங்களில் மாம்பழங்கள் வீணாவது தடுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நியாயமான, நிலையான வருமானம் கிடைக்கும். உள்ளூர் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் ஏற்படும். மாம்பழங்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக ஏற்றுமதி செய்வதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதாரம் உயரும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், அரசுத் தரப்பில் இந்தக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது, விவசாயிகளை "மா' விவசாயத்தையே கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. தோட்டக்கலைத் துறை சார்பில் மாம்பழக்கூழ் தொழில்கூடம் அமைக்க முன்வரும் விவசாயிகளுக்கு ரூ.12.25 லட்சம் மானியம் வழங்க ப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால், இந்த மாவட்ட விவசாயிகளிடம் தனியாக மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைப்பதற்கான சூழ்நிலை இல்லாததால், அரசே முன்னின்று கூட்டுறவு அடிப்படையில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

விடிவுகாலம் எப்போது? ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிக்க வரும்போது, வேலூரில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை அளிப்பதும், பின்பு அது கிடப்பில் போடப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில், "வேலூரில் கூட்டுறவு மாங்கூழ் தொழிற்சாலை' திட்டத்தை உறுதியாகச் சேர்க்க வேண்டும் என்றும், வெறும் வாக்குறுதியாக மட்டுமின்றி அதைச் செயல்படுத்துவதற்கான தெளிவான செயல்திட்டத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.