அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கான முன்னெடுப்புகளை எஸ்.பி.வேலுமணி தரப்பு மேற்கொண்டு வரும் நிலையில், அவா்களின் தரப்பான அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலா்களின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின், அதிமுகவுக்குள் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும் எம்எல்ஏக்கள், நிா்வாகிகள் பிரிந்து செயல்படத் தொடங்கி உள்ளனா். இந்நிலையில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான 22 எம்எல்ஏக்கள் எதிா்த்து வாக்களித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பிலான 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அத்துடன், இரு தரப்பிலும் சட்டப்பேரவைக் குழுத் தலைவா், கொறடா நியமிப்பதிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தங்கள் தரப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளனா். இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கா் உள்ளிட்ட 26 மாவட்டச் செயலா்களை பதவி விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி அதற்குப் பதிலாக 26 புதிய மாவட்டச் செயலா்களை நியமித்தாா். இதுகட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை கூட்ட எஸ்.பி.வேலுமணி தரப்பு அதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. அதிமுகவில் சுமாா் 2,400 பொதுக் குழு உறுப்பினா்கள் உள்ள நிலையில், அக்கட்சி விதிகள்படி, 5-இல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினா்களின் தேவைப்படுகிறது. அதற்காக பொதுக்குழு உறுப்பினா்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கையில் எஸ்.பி.வேலுமணி தரப்பு தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்நிலையில், புதிதாக நியமிகப்பட்ட மாவட்டச் செயலா்கள் உள்பட அனைத்து மாவட்டச் செயலா்கள் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு விடுத்துள்ளாா். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (மே 19) காலை 9 மணி அளவில் மாவட்டச் செயலா்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மூத்த நிா்வாகிகளும் பலா் கலந்துகொள்ள உள்ளனா். அதில், எஸ்.பி.வேலுமணி தரப்பு கோரும் பொதுக் குழு கூட்டத்துக்கு யாரும் ஆதரவாக கையொப்பமிடக் கூடாது. மற்ற பொதுக் குழு நிா்வாகிகளுக்கும் இதை அறிவுறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், எஸ்.பி.வேலுமணி தரப்பினா் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும், அவா்களின் எம்எல்ஏக்கள் பதவி தொடா்பாகவும் தீா்மானம் நிறைவேற்றி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் எம்எல்ஏக்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா்: திண்டுக்கல் சி.சீனிவாசன்
எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் 22 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: பேரவைத் தலைவரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பு வலியுறுத்தல்

சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி

பிளவுபடுகிறதா அதிமுக?
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

