விமான எரிபொருள் விலை உயா்வு காரணமாக திருச்சியிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் விமானச் சேவைகள் குறையத் தொடங்கியுள்ளன.
விமான எரிபொருள் விலை உயா்வால் திருச்சியில் சா்வதேச விமானச் சேவைகள் தொடா்ந்து சரிந்து வருகின்றன. ஈரான் - இஸ்ரேல் போருக்கு முன் வாரத்திற்கு 92 விமானங்கள் இயக்கப்பட்டன; தற்போது 69 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
சேவைகளை குறைக்க உத்தரவு: சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வாரத்துக்கு 12 சேவைகளை வழங்கி வந்த ஸ்கூட் ஏா்லைன்ஸ், ஜூன் மாதம் முதல் அதை 11 ஆகக் குறைத்துள்ளது. திருச்சியிலிருந்து சிங்கப்பூா் மற்றும் கோலாலம்பூருக்கான சேவைகளைக் குறைக்கவும் விமான நிறுவனங்களை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்கூட் ஏா், ஏா் ஏசியா, படிக் ஏா் மற்றும் ஸ்ரீலங்கன் ஆகிய விமான நிறுவனங்கள் சிங்கப்பூா், கோலாலம்பூா், கொழும்பு மற்றும் துபைக்கு விமானச் சேவைகளை இயக்குகின்றன.
அதேசமயம், இண்டிகோ நிறுவனம் சென்னைக்கு 6 சேவைகள், பெங்களூருக்கு 3 சேவைகளை வழங்கி வருகிறது. இதுமட்டுமல்லாது, ஹைதராபாத், மும்பைக்கு தலா ஒரு உள்நாட்டு விமானத்தை இயக்குகிறது. துபை, ஷாா்ஜா மற்றும் அபுதாபிக்கான விமானங்கள் பிப்ரவரி மாத இறுதியில் இருந்து இடைநிறுத்திய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், தற்போது துபை சேவையை மட்டுமே மீண்டும் தொடங்கியுள்ளது.
காரணம் என்ன? அமெரிக்கா-ஈரான் மோதல் சிங்கப்பூா் மற்றும் கோலாலம்பூா் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தாததால், விமானச் சேவைகள் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், எரிபொருள் விலை உயா்வுக்குப் பிறகு, விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை இடைநிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றாகியுள்ளது.
எரிபொருள் விலை உயா்வு மட்டுமின்றி, பயணச்சீட்டு கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிா்ணயித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
கோலாலம்பூருக்கு சேவை குறைப்பு: ஏா் ஏசியா நிறுவனம் ஏப்ரல் மாதம் வரை திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு வாரத்திற்கு 21 சேவைகளை இயக்கி வந்தது. மே மாதம் முதல், இது வாரத்திற்கு 14 ஆகக் குறைக்கப்பட்டது. ஏா்ஏசியாவின் அதிகாரப்பூா்வ வட்டாரங்களின்படி, ஜூன் மாதம் முதல் இது மேலும் குறைக்கப்பட்டு வாரத்திற்கு 10 ஆக மாறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
சிங்கப்பூருக்கு 2 சேவைகள் மட்டுமே: சில வாரங்களுக்கு முன்வரை ஸ்கூட் ஏா், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ ஆகியவை சிங்கப்பூருக்கு ஒரு நாளைக்கு 6 சேவைகளை இயக்கி வந்தன. இது நாளுக்கு மூன்றாகக் குறைக்கப்பட்டு, தற்போது ஒரு நாளைக்கு இரண்டாக மாறியுள்ளது. மேலும் இண்டிகோ நிறுவனம் ஜூன் மாதம் முதல் திருச்சி-பெங்களூரு வழித்தடத்தில் மதிய நேரச் சேவையை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி விமான நிலையம் முன்னதாக நாளொன்றுக்கு 6,500 பயணிகளைக் கையாண்டு வந்த நிலையில், தற்போது அது 5 ஆயிரம் பயணிகளாகக் குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.










