நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்

இறைச்சிக்காக பொது இடங்களில் மாடுகளை வெட்டக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து...

News image

உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 9:05 pm IST

பக்ரீத் பண்டிகையையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாடுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மே 27) தடை விதித்துள்ளது.

கோவையில் பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி கோவையைச் சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேலும், பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இறைச்சிக் கடைகளாக அங்கீகரிக்கப்படாத இடங்களில் பசுக்களையும் கன்றுகளையும் இறைச்சிக்காக வதைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை, ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மே 27) விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு தொடர்பாக கோவை செல்வபுரம் காவல் நிலையக் காவல் ஆய்வாளரால் தாக்கல் செய்யப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தில், பசுவதைக்காகச் சில தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைக் கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், இறைச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இடங்களை எப்படி சட்டப்பூர்வமான இறைச்சிக் கூடங்களாக கருத முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023-ஐ சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இறைச்சி வெட்டுதல் என்பது அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.

அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாடுகளை வெட்ட அனுமதிக்க முடியாது என்றும், பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Summary

Madras High Court directs State to ensure no cow slaughter happens in public places during Bakrid

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.