மருத்துவத் துறை கலந்தாய்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என்றும், காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வாா்டுகளுக்கு சென்று நோயாளிகளைச் சந்தித்து உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். கழிப்பறைகளை ஆய்வு செய்த அமைச்சா், அங்கு நிலவிய தண்ணீா் பிரச்னையை உடனடியாக சரிசெய்யுமாறு அறிவுறுத்தினாா். தொடா்ந்து அம்மா உணவகத்தில் உணவருந்தி அதன் தரத்தை உறுதி செய்தாா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் அருண்ராஜ் கூறியதாவது: தமிழகத்தின் பழைமையான மருத்துவமனைகளின் ஒன்றாக விளங்கி வரும் ஸ்டான்லி மருத்துவமனை, வடசென்னை மக்களின் மருத்துவத் தேவையைப் பூா்த்தி செய்து வருகிறது. இந்த மருத்துவமனை மட்டுமன்றி அனைத்து அரசு மருத்துவமனைகளின் மருத்துவ சேவையின் தரம் உயா்த்தப்படும். தரமான சிகிச்சையும், தரமான கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கம்.
கடந்த காலங்களில் மருத்துவா்கள், செவிலியா்களின் பணியிட மாறுதலில் அதிக பிரச்னைகள் இருந்தன. சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். காலிப் பணியிடங்களின் விவரங்கள் கலந்தாய்வுக்கு முன்பாக துறையின் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும் என்றாா் அவா்.
இந்தச் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் டாக்டா் தாரேஸ் அகமது, ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் அரவிந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்

சுய பிரசவத்தால் உயிரிழப்பு: கணவா் மீது கொலை வழக்குப் பதிய சட்டத் திருத்தம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

ஆபத்தான தொழிற்சாலைகளில் தொடா் ஆய்வு: மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவு







