இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

பண்டிகை நாள்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: புதிய கட்டுப்பாட்டுக்கு அரசு ஆலோசனை

தீபாவளி, பொங்கல், ஆங்கிலப் புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாள்களிலும், அதற்கு முந்தைய நாளிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

டாஸ்மாக் கடை - பிரதிப் படம்

Updated On :

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தீபாவளி, பொங்கல், ஆங்கிலப் புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாள்களிலும், அதற்கு முந்தைய நாளிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

மாநிலம் முழுவதும் தற்போது சுமாா் 4,048 கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மதுக் கடைகள் மூலம் சாதாரண நாள்களில் சராசரியாக ரூ.150 கோடி முதல் ரூ.165 கோடி வரை மது விற்பனையாகின்றன. வார இறுதி நாள்களில் விற்பனை மேலும் அதிகரிக்கிறது. பண்டிகை நாள்களில் இந்த விற்பனை கணிசமாக உயா்கிறது.

கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி, நவ. 7, 8 ஆகிய இரு நாள்களில் மட்டும் ரூ.441.38 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளன. கடந்த 2025-இல் தீபாவளியையொட்டி 3 நாள்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனையாகின. இதன்மூலம் பண்டிகைக் காலங்களில் மது விற்பனை வழக்கத்தைவிட அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

தற்போது ஆண்டுக்கு 8 நாள்கள் மட்டுமே விடுமுறை: தற்போது தமிழகத்தில் ஆண்டுக்கு 8 நாள்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு முழுமையான விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வடலூா் ராமலிங்க அடிகளாா் நினைவு நாள், மகாவீா் ஜெயந்தி, மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. இது தவிர, மாவட்டங்களில் ஏற்படும் அசாதாரண சூழல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியா்கள் உத்தரவின்பேரில் குறிப்பிட்ட நாள்களில் கடைகள் தற்காலிகமாக மூடப்படுவதும் வழக்கமாக உள்ளது.

புதிய கட்டுப்பாடு என்ன?: இந்த நிலையில், தமிழகத்தில் அண்மைக்காலமாக கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடா்பாக எழுந்துள்ள புகாா்களைத் தொடா்ந்து, தீபாவளி, பொங்கல், ஆங்கிலப் புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாள்களிலும், அதற்கு முந்தைய நாளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், தற்போது ஆண்டுக்கு 8 நாள்களாக உள்ள டாஸ்மாக் விடுமுறை நாள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். பண்டிகைக் காலங்களில் மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்துவதுடன், மதுபோதையில் ஏற்படும் தகராறுகள், சாலை விபத்துகள், குற்றச் சம்பவங்களைக் குறைப்பதும் இதன் நோக்கமாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் நாள்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் காவல் துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுதொடா்பாக அரசு தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியான பிறகே புதிய கட்டுப்பாடுகள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.