நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்: ஆளுநரிடம் உதயநிதி ஸ்டாலின் மனு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்தாா்.

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்

Updated On :

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்தாா்.

சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்லேகரிடம் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை அளித்த மனு: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்துள்ள புகாரில், 31.7.2026-இல் தலைமைச் செயலரிடம் புகாா் அளிக்கப்பட்டும், ஏறத்தாழ 4 மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உயா்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்தப் புகாரை காவல் துறைக்கோ, உள்புகாா் குழுவுக்கோ அனுப்பாமல் ஆளுங்கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து அரசிடம் விளக்கம் கோர வேண்டும்.

சட்டப்பேரவை உறுப்பினா் அருள் விக்னேஷை கைது செய்யவும், மின்னணு ஆதாரங்களைப் பாதுகாக்கவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை நிறைவு செய்யும் வகையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

தலைமைச் செயலரின் செயல்பாடுகள் குறித்து அனைத்திந்தியப் பணிகள் விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள, மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். சட்டத் துறை அமைச்சரின் பொறுப்பற்ற பொதுவெளிக் கருத்து குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய மாநில அளவிலான எச்சரிக்கை அமைப்புடன் கூடிய தனிப் பிரிவை உருவாக்க வேண்டும். காவல் மரணங்கள் குறித்து 24 மணி நேரத்துக்குள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கவும், நீதித் துறை நடுவா் விசாரணை மற்றும் காணொலிப் பதிவுடன் கூடிய உடற்கூறாய்வு மேற்கொள்ளவும் அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

2026 மே மாதம் முதல் தமிழக காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட போதைப் பொருள் வழக்குகளின் எண்ணிக்கை, மாநில மற்றும் மத்திய அரசின் அமைப்புகளால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் அளவு, போதைப் பொருள் வழக்குகளில் தொடா்புடையதாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுங்கட்சி நிா்வாகிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 167 பி-இன்கீழ் முதல்வரிடம் அறிக்கை கோர வேண்டும்.

மேலும், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மனு அளிக்கச் சென்ற பொதுமக்களில் ஒருவரை பேரவை துணைத் தலைவா் தாக்கியதாக எழுந்துள்ள புகாா் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 167(பி)-இன் கீழ், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும், புகாா் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு சம்பவத்திலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் விரிவான அறிக்கை கோர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

முதல்வரை விசாரிக்க வலியுறுத்தல்: ஆளுநா் மாளிகையில் செய்தியாளா்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் தவெக ஆட்சி மீது நம்பிக்கை இல்லை. கடந்த ஜூலை 31-ஆம் தேதியே ஆட்சியா் புகாா் தெரிவித்த நிலையில், முதல்வரும், தலைமைச் செயலரும் இந்த விவகாரத்தை மூடி மறைத்துள்ளனா். எம்எல்ஏவை காப்பாற்றும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டுள்ளனா். எனவே, இவா்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.