திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம்: உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மாணிக்கம் தாகூர்
கூட்டாட்சித் தத்துவம், மத நல்லிணக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள மாணிக்கம் தாகூர்....

மாணிக்கம் தாகூர் - கோப்புப்படம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கூட்டாட்சித் தத்துவம், மத நல்லிணக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
மதுரை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.
மத நம்பிக்கைகளையும் வழிபாட்டு உரிமைகளையும் மதித்துப் போற்றுவதோடு, பல்வேறு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், தமிழ்நாட்டில் நிலவி வரும் அமைதியான சமூகச் சூழலையும் பாதுகாப்பது அனைவரின் தலையாய பொறுப்பாகும்.
இத்தகைய சூழலில், கோயில் நிர்வாகம் தொடர்பாக நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்திருப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மத்திய துணை ராணுவப் படைகளின் பங்களிப்பு ஆகியவை நீதித்துறை, மாநில நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அதிகார வரம்புகள் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. உணர்வுப்பூர்வமான இதுபோன்ற விவகாரங்களில், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாகப் பொறுப்புகளும், இந்திய அரசியல் சாசனம் வகுத்துக்கொடுத்துள்ள கூட்டாட்சிக் கட்டமைப்பும் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவானது எந்த ஒரு தரப்பினரின் மத உணர்வுகளையும் பாதிக்காத வண்ணம், அனைத்துத் தரப்பினரிடையேயும் நம்பிக்கையையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டியது அவசியமாகும்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சியும் நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதே நேரத்தில் தமிழ்நாட்டின் அமைதியும், மத நல்லிணக்கமும், அரசியல் சாசன விழுமியங்களும் எந்தவிதப் பாதிப்புமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுதியான நிலைப்பாடாகும்.
எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Issue regarding the lighting of the deepam at Tirupparankundram: The Supreme Court should reconsider – Manickam Tagore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


