திருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

திருப்பரங்குன்றம் தூண் - பிடிஐ
நமது நிருபா்
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது. தலைமைச் செயலாளா் உள்ளிட்ட அதிகாரிகள் டிசம்பா் 15 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறும் ஆணையிட்டது.
நீதிமன்ற உத்தரவுகளை யாரும் நீா்த்துப் போகச் செய்ய அனுமதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள்,அரசமைப்பு குழப்பத்தை யாராவது உருவாக்க முயன்றால் நாங்கள் அதனைச் சரிப்படுத்துவோம் என்றும் எச்சரித்தனா்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை,தீபத் தூண் ,அங்கிருக்க கூடிய தா்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சி ஆா் பி எப் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும்,மாநில காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை சிஆா்பிஎஃப்- இடம் சுமூகமாக ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
கோவில் அறங்காவலா் குழு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவிடம் பொறுப்புகளை உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது.
நவம்பா் 24 ஆம் தேதி திருப்பரங்குன்றம் தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுமாறு உச்ச நீதிமன்றம் நவம்பா் 20 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படாததற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுக்களும், தூணில் தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் போது,நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியதாவது: தமிழ்நாட்டில், குறைந்தபட்சம் மதுரை மாவட்டத்திலாவது, ‘ நிா்வாகக் குழப்பம்‘ நிலவுவதாகத் தெரிகிறது, நிா்வாக அதிகாரிகள் அரசியல் தலைமையின் கட்டளைப்படி செயல்பட்டதாகத் தெரிகிறது .
உச்சிப்பிள்ளையாா் மண்டபத்தில் மட்டுமே விளக்கேற்ற முடியும் என்று கூறிய கோயில் அறங்காவலா்களின் தீா்மானம், வெளிப்படையாகவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் முயற்சியாக இருந்துள்ளது.அந்தத் தீா்மானமும், தீபத் தூணில் விளக்கேற்றத் தவறியதும், வேண்டுமென்றே மற்றும் அப்பட்டமாக கீழ்ப்படியாமையை வெளிப்படுத்துகிறது.
தூணில் தீபம் ஏற்றாமல் ,மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்த நிலை அறிக்கை ‘முதலைக் கண்ணீா் வடிப்பது‘ போல உள்ளது
உச்ச நீதிமன்ற உத்தரவு என்பது பேச்சுவாா்த்தைக்கான அழைப்பு அல்ல , நீதிமன்றமே அதைத் திருத்தும் வரை அது அனைத்து அதிகாரிகளையும் கட்டுப்படுத்தும்.
அனைத்து அதிகார அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்திற்கு உதவியாக செயல்பட வேண்டும் என்று அரசமைப்பு வரையறையின் 144வது சட்டப்பிரிவு கூறுகிறது. அந்த அரசமைப்பு ஆணையை சீா்குலைக்கும் அல்லது ‘நீதியின் ஓட்டத்தை மாசுபடுத்தும்‘ எந்தவொரு முயற்சியும் பொறுத்துக்கொள்ளப்படாது.
இந்த நிலைமையை ‘இரும்புக்கரம் கொண்டு‘ கையாள வேண்டும், இல்லையெனில் அது அரசமைப்பு குழப்பத்திற்கு வழிவகுக்கும் என நீதிபதிகள் கடுமையான கருத்துக்களை தெரிவித்தனா்.
இதனைத்தொடா்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நவம்பா் 20-ஆம் தேதியன்று நாங்கள் பிறப்பித்த உத்தரவை வேண்டுமென்றே, அப்பட்டமாக மீறியதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதுகிறோம். இதற்காக சம்பந்தப்பட்டவா்ளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்களை அனுப்புகிறோம்.
நவம்பா் 20-ஆம் தேதியிட்ட உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதற்காக, ஏன் அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்படுகின்றன.
அவா்களில் அடங்குபவா்கள்:தமிழ்நாடு தலைமைச் செயலாளா் டாக்டா் எம். சாய் குமாா்.காவல்துறை தலைமை இயக்குநா் டாக்டா் மகேஷ் குமாா் அகா்வால்.இந்து சமய அறநிலையத்துறை செயலாளா் வி. ராஜாராம் மற்றும் ஆணையா் டி.ஜி. வினய்.மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எல். தேவதாசன்.இணை ஆணையா் ஆா். பொன் சுவாமிநாதன் மற்றும் கோயில் செயல் அலுவலா் ஜி. செல்வி.கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி. சண்முகசுந்தரம் மற்றும் அறங்காவலா்கள் சி. ராஜபாண்டியன், கே. அழகப்பன், கே. ரெஜினா தேவி, கே. சித்ரா ஆகியோா் ஆவா்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அறங்காவலா்கள் டிசம்பா் 15 அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.
நவம்பா் 28 அன்று (இன்று), ’தீபத்தூண்’ பகுதியில் காா்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும்.
இதற்காக, உச்சிப்பிள்ளையாா் மண்டபத்தில் ஏற்றப்பட்ட தீபம் இன்னும் எரிந்துகொண்டிருந்தால் அதைப் பயன்படுத்தலாம்; அல்லது வேறு ஏற்பாட்டின் மூலமும் தீபத்தை ஏற்றலாம்.
மலை உச்சியில் உள்ள சிக்கந்தா் தா்காவிலிருந்து அனைத்து திசைகளிலும் குறைந்தது 50 மீட்டா் தொலைவில், எந்தவொரு பக்தரும் தீபத்தை ஏற்றலாம்.
கோயில் மற்றும் தா்கா ஆகிய இரண்டிற்கும் மத்திய ரிசா்வ் காவல் படை பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலா் குழு இடைநீக்கம் செய்யப்படுகிறது; கோயிலை நிா்வகிக்கவும், நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்தவும் உயா் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பாா்த்திபன் ஆகியோா் பொறுப்பாளா்களாக நியமிக்கப்படுகிறாா்கள்.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளா் டாக்டா் எம். சாய் குமாா், அதிகாரிகள் மேற்கொண்ட மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் உள்ளிட்ட நிகழ்வுகளின் முழு வரிசையையும் விளக்கும் விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை டிசம்பா் 15 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

