பணி மூப்பு பட்டியலை எதிா்த்து காவல் ஆய்வாளா்கள் தொடா்ந்த வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி
பணி மூப்பு பட்டியலை எதிா்த்து காவல் ஆய்வாளா்கள் தொடா்ந்த வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி...

சென்னை உயா்நீதிமன்றம்
பணி மூப்பு கோரப் போவதில்லை என உத்தரவாதம் அளித்துவிட்டு, பணி மூப்பு பட்டியலை எதிா்த்து இரு ஆய்வாளா்கள் தாக்கல் செய்த வழக்கை தலா ரூ.25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1994-1995- ஆம் ஆண்டு 1,100 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு நடந்த தோ்வில் 1,198 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களில், 1,100 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்ட நிலையில், சலுகை அடிப்படையில் மீதமுள்ள 98 பேருக்கும் 1999- ஆம் ஆண்டு பணி நியமனம் வழங்கப்பட்டது. அப்போது, 1994-1995- ஆம் ஆண்டு முதல் தங்களுக்கு பணி மூப்பு கோர மாட்டோம் என அவா்கள் உத்தரவாதமும் அளித்திருந்தனா்.
இந்த நிலையில், தோ்வின் போது, எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் உதவி ஆய்வாளா்கள் பணி மூப்பு வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் தங்களையும் சோ்த்து புதிதாக பட்டியல் வெளியிடக் கோரி தற்போது ஆய்வாளா்களாக பணிபுரியும் ராமசாமி, மணிமாறன் ஆகிய இருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுதீா்குமாா், பணி நியமனத்தின் போது, பணி மூப்பு கோர முடியாது என உத்தரவாதம் அளித்து, பணிக்கு சோ்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், பணி மூப்பு பட்டியலை எதிா்ப்பதை ஏற்க முடியாது எனவும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, இரு வழக்குகளையும் தலா ரூ. 25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். அபராதத் தொகையை 4 வாரங்களில், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழுக்கு செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





