
சர்ச்சை விடியோ! தாராபுரம் தவெக வேட்பாளர் விளக்கம்!!
சர்ச்சை விடியோ குறித்து தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா விளக்கம் அளித்துள்ளதைப் பற்றி...

முதல்வர் விஜய்யுடன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா.
சமூக வலைதளங்களில் பரவிய சர்ச்சை விடியோ குறித்து தாராபுரம் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் கடந்த மே மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளராக களம் இறங்கினார்.
இந்தத் இடைத்தேர்தலில் தாராபுரம் பேரவைத் தொகுதி தவெக சார்பில் பி.சத்தியபாமா, திமுக சார்பில் செள. சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, நாதக சார்பில் மு.கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப. லட்சுமணன் ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்பட 22 பேர் களத்தில் உள்ளனர். இங்கு 1,07,285 ஆண் வாக்காளர்கள், 1,16,013 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவா் 8 பேர் உள்பட 2,23,306 வாக்காளர்கள் உள்ளனர்.
இன்று (அக். 6) காலை வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், தேர்தலுக்கு முந்தைய இரவில் தவெக வேட்பாளர் வி. சத்தியபாமா பேசும் சர்ச்சை விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பியது.
அந்த விடியோவில், “கடந்த முறை ரூ. 31 கோடி செலவு செய்திருக்கிறேன். ஆனால், ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை. அந்த மாதிரி இருந்துவிட்டு இந்த நாய்கள்கூட சேருவது என்பது என்னால் சத்தியமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அமைச்சர்கள் தங்குவதற்கு அறைகள் (ரிசார்ட்) பதிவு செய்ததற்கு மட்டும் ரூ. 14 லட்சம் செலவு செய்திருக்கிறோம். நம்மலும் ஒரு கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு வந்திருக்கிறோம். அதனால் முடியாது என்று சொல்ல முடியாது. மேலும், கூட்டணி கட்சியினரும் விமானத்தில் வருவதற்காக டிக்கெட் செலவுகளும் இருக்கின்றன” என்று பேசுவது போல பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தின் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. தவெக வேட்பாளர் சத்தியபாமா மதுக்கம்பாளையம் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பில் சர்ச்சை விடியோ குறித்து அவர் பேசுகையில், “அந்த மாதிரி பேச்சுலாம் இல்ல.. அது சித்தரிக்கப்பட்டது. இது தேர்தலில் எதிரொலிக்காது. தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக புகார் கொடுப்பேன்” என்றார்.
இந்த விடியோ பரவி வரும் நிலையில் எதிர்க்கட்சியினர், சமூக வலைதளவாசிகள் சத்யபாமாவின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த விடியோ உண்மையானதா? அல்லது போலி விடியோவா என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
Summary
Sathyabama, the Tamizhaga Vettri Kazhagam candidate for Dharapuram, has issued a clarification regarding a controversial video that circulated on social media.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






