தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவேன்; வளர்ச்சியே எனது 'மந்திரம்': பிரதமர் மோடி
வளர்ச்சியையே தனது தாரக மந்திரமாகக் கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி...

பிரதமர் நரேந்திர மோடி - டிஎன்எஸ்
சென்னை: வளர்ச்சியையே தனது தாரக மந்திரமாகக் கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களுக்காகச் சேவையாற்றுவதிலும், முதல்வர் சி. ஜோசப் விஜய்யுடன் இணைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வதிலும் தனக்குள்ள உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஒரு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார்.
விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிய, ஆளுநர் ஆர்லேகர், முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர் என். ஆனந்த், தலைமைச் செயலாளர் சாய்குமார், காவல்துறை தலைவர் மகேஷ்குமார் மற்றும் பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் போரூர் புறப்பட்டு வந்து மோடி, விமான நிலையம் முன்பிருந்து பரங்கிமலை ராணுவ பயிற்சி வளாகம் வரை சாலை வலம் சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் ஏராளமான பாஜகவினர் கட்சி கொடிகளுடன் திரண்டு நின்று மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களை பார்த்து மோடி உற்சாகமாக கை அசைத்தார்.
போரூர் மெட்ரோ வாசலில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 4 ஆவது வழித்தடத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லி-வடபழனி இடையேயான 14.64 கிலோ மீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளன. ரூ.4,900 கோடி மதிப்பில் நிறைவடைந்த இந்த பணியை தொடங்கி வைத்து பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடியும்- முதல்வர் விஜய்யும் சேர்ந்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் இருவரும் மெட்ரோ ரயிலில் பூந்தமல்லி வரை பயணம் செய்தனர். பூந்தமல்லியில் இறங்கி ரயில் நிலையத்தை பார்வையிட்டனர். மீண்டும் அதே ரயிலில் அங்கிருந்து போரூர் வந்தனர்.
மெட்ரோ ரயில் பயணத்தின்போது பிரதமர் மோடி முதல்வர் விஜய்யுமடன் உற்சாகமாக உரையாடினார்.
பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசுகையில், வளர்ச்சியையே தனது 'மந்திரமாக'க் கொண்டுள்ளதாகக் கூறியவர், தமிழக மக்களுக்காகச் சேவையாற்றுவதிலும், முதல்வர் சி. ஜோசப் விஜய்யுடன் இணைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வதிலும் தனக்குள்ள உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சி உள்பட, பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றங்களை மோடி பட்டியலிட்ட பேசினார்.
சுமார் ரூ. 13,000 கோடி மதிப்பிலான ரயில்வே, சாலை மற்றும் பெட்ரோலியம் சார்ந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அவற்றுக்கான அடிக்கல் நாட்டியும் முதல்வர் விஜய்யுடன் இணைந்து உரையாற்றிய பிரதமர், வளர்ச்சியை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.
"நான் எப்போதும் நாட்டின் வளர்ச்சியையே எனது தாரக மந்திரமாகக் கொண்டுள்ளேன்" என்று அவர் கூறினார்.
நான் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலத்தின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டேன்.
பிரதமரான பிறகு, அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயன்றது மட்டுமல்லாமல், மாநிலங்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டேன் என்று தெரிவித்தார்.
தமிழகத்தைக் குறிப்பிடுகையில், தான் முதல்வராக இருந்தபோது, மறைந்த தலைவர்களான மு. கருணாநிதி மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தை வழிநடத்திய காலத்தில் அவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றதாகவும், பிரதமரான பிறகு, முன்னாள் முதல்வர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மு. க. ஸ்டாலின் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.
அரசுகள் மாறலாம், ஆனால் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், அதன் மக்களுக்காகச் சேவையாற்றுவதிலும் எனது உறுதிப்பாடு மாறாமல் உள்ளது.
மக்களுக்குச் சேவையாற்றும் உறுதியுடன், முதல்வர் விஜய்யுடன் இணைந்து மாநிலத்தின் வளர்ச்சியை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம் என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக நிறுவனர் விஜய் வெற்றி பெற்று, தனது முதல் அரசை நடத்தி வருகிறார்.
பிரதமர் மற்றும் முதல்வராக பணியாற்றிய 25 ஆண்டுகள் குறித்து மோடி பேசுகையில், "அரசுத் தலைவராக, மக்கள் மீதான எனது நம்பிக்கையும், கூட்டுறவு கூட்டாட்சி மீதான நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளன," என்று கூறினார்.
Prime Minister Narendra Modi on Sunday said he has taken development as his 'mantra,' and reaffirmed his commitment to serve the people of Tamil Nadu and ensuring the state's progress by working
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


