‘மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கும் முதல்வர் விஜய்’ - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கும் தவெக தலைவரும் முதல்வருமான விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

முதல்வர் விஜய் - எடப்பாடி பழனிசாமி.
மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கும் தவெக தலைவரும் முதல்வருமான விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி 4500 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்காக ஒப்பந்தப் புள்ளிகளை கோரி இருந்த மின்சார வாரியம், ஒப்பந்தப் புள்ளி தாக்கல் செய்திருந்த தனியார் மின் நிறுவனங்களிடம் ஒரு யூனிட் ரூ.31.99 முதல் ரூ.37 வரை, சராசரியாக, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 என்ற விலையில் வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இந்த நிலையில், இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், “தமிழகத்தில் எதிர்பாராவிதமாக 5 மாதங்களுக்கு முன் அமைந்த த.வெ.க. கூட்டணி அரசின் அனுபவமின்மை மற்றும் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது!
காரணமே இல்லாமல் ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். தமிழக மக்களின் இந்த சிரமங்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு இந்த ஆட்சியாளர்கள் விஞ்ஞான முறையில் ஊழல் செய்ய முனைகிறார்களோ என்ற எண்ணம் மக்களிடம் எழுந்துள்ளது!
மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவது ஒருபுறம்! அனைத்துப் பொருள்களின், குறிப்பாக உணவுப் பொருள்களின் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு மறுபுறம்! இந்தத் துன்பங்களில் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தையும், அத்தியாவசிய உணவுப் பொருள்களையும், கமிஷன் பெற்றுக்கொண்டு கொள்முதல் செய்வதற்கு, செயல் திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல!
ஜெயலலிதா, 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், திமுக ஆட்சியின் மிகப் பெரிய அவலமான தொடர் மின்வெட்டை சீர்செய்ய தொடர்ந்து பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். திமுக ஆட்சியில் பல மின் உற்பத்தித் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதையும், புதிய திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாததையும் கண்டறிந்து, பல புதிய மின் உற்பத்தி திட்டங்களைத் தொடங்கினார்.
மின் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த குளறுபடிகளை சீர்செய்து தமிழ் நாட்டை மின்வெட்டில்லாத மாநிலமாக மாற்றிக் காட்டினார். தொடர்ந்து, எனது தலைமையிலான அம்மாவின் அரசும், இப்படி தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக தமிழ் நாடு மின் மிகை மாநிலமாக விளங்கியது. ஆனால், தற்போதுள்ள திறமையற்ற த.வெ.க. அரசு, அப்படி எந்தவிதமான ஆய்வுகளையும் செய்ததாகத் தெரியவில்லை.
மின் உற்பத்தியை அதிகரிக்க எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மின் தொடர் கட்டமைப்பிலும், நிர்வாகத்திலும் பல சீர்கேடுகளை ஏற்படுத்தி, நாள்தோறும் தமிழ் நாட்டின் பல இடங்களில் மின்வெட்டை ஏற்படுத்தி, தமிழகத்தை இருளில் மூழ்கடித்து, தமிழக மக்களை தாங்கொண்ணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.
தற்போதைய த.வெ.க. ஆட்சியில், தமிழ் நாடு மின்சார வாரியம் அக். 12 முதல் 31 ஆம் தேதி வரை தினசரி 4400 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்கு 5 தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளது என்றும்; வரலாற்றிலேயே இல்லாத வகையில் யூனிட் ஒன்றுக்கு சராசரி ரூ. 35 என்ற, மிக மிக அதிக விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது!
கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தவுடன், யூனிட் ஒன்றுக்கு ரூ. 11 முதல் 20 வரை என்று அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டதாகவும்; அதில் ஊழல் நடைபெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை காரணம் காட்டி அந்த ஒப்பந்தங்களை த.வெ.க. அரசு ரத்து செய்ததாகச் செய்திகள் வெளியாகின.
கடந்த ஜூன் மாதம். நீண்ட காலத்திற்கு குறைந்த விலையிலான மின் ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக உறுதியளித்து த.வெ.க. அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. ஆனால், தற்போது பழைய ஒப்பந்தங்களைவிட இரு மடங்குக்கும் மேலான விலையில், இந்த வாடகைக்கால் த.வெ.க. அரசு ஒரு யூனிட்டிற்கு ரூ. 32 முதல் ரூ. 37 விலையில் மிக மிக அதிக விலையில், குறுகிய கால ஒப்பந்தத்தை தனியாரிடம் போட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசு அவசர அடிப்படையில் டெண்டர் கோருவதற்கு முன்பே, அதாவது செப். 9-ஆம் தேதியன்றே, ஆந்திர அரசு அக்டோபர் மாத காலத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 16-20 என்ற விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய இறுதி செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த த.வெ.க. அரசு மேற்கொண்ட ரூ. 32-37 என்ற விலையில் வேறு எந்த மாநிலமும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை. மின் பரிமாற்றச் சந்தையில் சராசரி விலை சமீப காலமாக ரூ. 7-10 ஆகவும், இருதரப்பு ஒப்பந்தங்களில் உச்ச நேரத் தேவைக்கான சில ஒப்பந்தங்களின் விலை ரூ. 20-க்கு அருகிலும் இருந்தன.
இதற்கு முன்பு மத்திய தொகுப்பில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் சராசரியாக யூனிட் ஒன்றிற்கு சுமார் ரூ. 15 வரை செலவானதாக வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்க அதிக விலையில் ஒப்பந்தம் போட்டு, ஏற்கெனவே கடன் சுமையில் சிக்கியுள்ள தமிழ் நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கும் ஜோசப் விஜய்யின் பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம்!” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Edappadi Palaniswami has condemned TVK leader and Chief Minister Vijay for his eagerness to hand over the Electricity Board to the private sector.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

