விவசாயிகளைப் பற்றி பேச கொஞ்சம்கூட நேரம் இல்லையா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியது குறித்து...

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து தவெக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் இரண்டு இடையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
இந்த அவமானம் “வெற்றி” மாடல் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் வரப் போகிறது?
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மாட்டீர்கள். காங்கிரஸ் கட்சியோடு காவிரி குறித்து பேசமாட்டீர்கள். சட்டப் போராட்டத்தையும் ஒழுங்காக நடத்த மாட்டீர்கள்.
தமிழ்நாட்டுக்கு நேரெதிராக பேசிவரும் கர்நாடக முதல்வரை ஒரு வார்த்தைகூட கண்டிக்க வக்கில்லாமல், தில்லியில் அவரோடு போட்டோவுக்கு 'போஸ்' கொடுக்கிறீர்கள்.
ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க முடியாமல் ஏற்கெனவே குறுவை சாகுபடி வீணாகிப் போனது.
தற்போதும் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்காமல் இருப்பதாலும், நமக்கு உரிமையான நீரைப் பெற முடியாமல் இங்குள்ள தவெக கூட்டணி அரசாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் வந்து சேராமல், இந்த அரசால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட உள்ளது.
தில்லிக்கு போய் சோனியா காந்தியின் குடும்பக் கதையை கேட்டு சிரிக்க இருந்த நேரம், தமிழக விவசாயிகளைப் பற்றி பேச கொஞ்சம் கூட இல்லையா?
எப்போது பார்த்தாலும் “எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்” என்று நீலிக்கண்ணீர் வடிப்பீர்களே- உங்கள் ஆச்சரியக்குறி ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு கொடுத்து வரும் அவமானங்களை எல்லாம் பார்த்தால், “உங்கள் சுயநலத்துக்காக தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத் தான் ஆட்சிக்கு வந்தீர்களோ?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
தமிழகத்தின் ஜீவாதார உரிமையோடு, விவசாய மக்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, நான் என தொடர்ந்து அதிமுக கடுமையான, போராட்டங்களுக்கு பிறகு பெற்ற உரிமை இது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கி நமது உரிமையை நிலைநாட்டினோம்.
நீர் இன்றி நெல் இல்லை. நெல் இன்றி குடி இல்லை. குடி இல்லையேல் கோன் எதற்கு? என்று கேட்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
ADMK Secretary Edappadi Palaniswami questions the TVK government on the Cauvery water issue
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

