ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு!
ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதையொட்டி அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பில் அரசு ஈடுபட்டிருப்பது பற்றி....

பேருந்துகள்.
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் சிறப்புப் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆயுத பூஜையை முன்னிட்டு, 15/10/2026 முதல் 18/10/2026 வரையில், சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 8,764 பேருந்துகளுடன், கூடுதலாக 6,199 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,963 பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டு, (15.10.2026) அன்று சென்னையிலிருந்து 2,546 பேருந்துகளில் 1,01,840 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் சென்னையிலிருந்து 9,636 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், 13/10/2026 அன்று நந்தனம், மெட்ரோ இரயில் நிறுவன தலைமை அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கிளம்பாக்கம் (KCBT) பேருந்து நிலையத்தில் 7 பொதுமேலாளர்களின் தலைமையில் 35 அலுவலர்கள் அடங்கிய குழுக்களும், CMDA காலநிலை பூங்கா அருகில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் 2 பொது மேலாளர் தலைமையில் 10 அலுவலர்கள் அடங்கிய குழுக்களும்,மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் 2 பொது மேலாளர்களின் தலைமையில் 10 அலுவலர்கள் அடங்கிய குழுக்களும், கோயம்பேடு (CMBT) பேருந்து நிலையத்தில் 3 பொதுமேலாளர்களின் தலைமையில் 15 அலுவலர்கள் அடங்கிய குழுக்களும் மற்றும் மாதவரம் (MMBT) பேருந்து நிலையத்தில் 1 பொதுமேலாளர் தலைமையில் 6 அலுவலர்கள் அடங்கிய குழுக்களும் அமைக்கப்பட்டு சீரான பேருந்து இயக்கம் மற்றும் பயணிகள் உரிய நேரத்திற்கு பேருந்தில் அனுப்பப்படுவதை கண்காணித்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பிற நகரங்களில் உள்ள அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் பொது மேலாளர்கள் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சீரான பேருந்து இயக்கம் மற்றும் பயணிகள் உரிய நேரத்திற்கு பேருந்தில் அனுப்பப்படுவது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு போதுமான இணைப்புப் பேருந்துகள் 24 x 7 கட்டணமில்லாமல் இயக்கப்படுகிறது.
மேலும், கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் மற்றும் சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளிலிருந்தும் போதுமான இணைப்புப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் இயக்கப்பட்டுவருகிறது.
பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை (Control Room) அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைகள் மற்றும் புகார்கள் தெரிவிப்பதற்கு 94450 14436 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 149 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800-425-6151 (Toll Free Number ) மற்றும் 93848 08333 என்ற whatsapp எண்னிலும் புகார் அளிக்கலாம்.
சிறப்புப் பேருந்துகள் இயக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக குடிநீர், கழிவறை, மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் பேருந்துகள் புறப்படும் நேரம், நடைமேடை விவரங்கள் அடங்கிய மின்னணு தகவல் பலகைகள் மற்றும் பேருந்துகள் புறப்படும் நேரம் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை முடிந்த பின்னர், வரும் 20/10/2026 மற்றும் 21/10/2026 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கக் கூடிய 4,382 பேருந்துகளுடன், கூடுதலாக 4,809 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 9,191 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு திருப்பும் பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பேருந்து நிலையங்களிலிருந்து இணைப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பேருந்து முனையங்களில் கூடுதலாக உள்சுற்று கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி, காவல் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், போக்குவரத்துத் துறை அலுவலர்களால் தொடர்ந்து கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் 10 முன்பதிவு மையங்கள், கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் மற்றும் மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் ஆகியவற்றில் 14 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. மேலும், முன்பதிவு செய்துகொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான TNSTC Mobile app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
(15.10.2026) அன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் போக்குவரத்துத் துறை செயலாளர் இல.நிர்மல்ராஜ், ஆகியோர் கிளாம்பாக்கம் CMDA காலநிலை பூங்கா அருகில் அமைந்துள்ள திறந்த வெளி தற்காலிக பேருந்து நிலையம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) மற்றும் மறைமலைநகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்கப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்கள்.
மேற்படி பணிகளை அந்தந்த மாவட்டங்களில் கண்காணித்திட அந்தந்த போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு அலுவலர்களாகவும், இப்பேருந்து இயக்கத்தை முழுமையாகக் கண்காணித்திட அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஒருங்கிணைப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Summary
"To facilitate the general public in traveling to their hometowns on the occasion of the Aayudha Pooja festival, special buses and special arrangements have been made by the Transport Department."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


