ஆயுத பூஜை எதிரொலி : பூக்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களின் விலை உயர்வு!
ஆயுத பூஜை எதிரொலியால் பூக்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது குறித்து...

கோவை பூச்சந்தையில்... - படம் - தினமணி
ஆயுத பூஜை எதிரொலியால் பூக்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.
ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும், மரபு வழிபாட்டை மேற்கொள்ளும் ஆர்வத்துடன் பொதுமக்களும், தொழில்துறையினரும் அதிகாலை முதலே பூஜைக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள், வாழை மற்றும் மாவிலை தோரணங்கள், பனை ஓலையில் செய்யப்பட்ட அலங்காரப் பொருள்கள், வீடுகள் மற்றும் வாகனங்களுக்கான திருஷ்டிப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்கள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன.
கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.கோவை பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களை கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் வாங்கிச் செல்கின்றனர். ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் 20 டன்னுக்கும் அதிகமான பூக்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
உயர்ந்த பூக்களின் விலை ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ குண்டுமல்லி ரூ. 400-க்கும், கனகாம்பரம் ரூ. 500 முதல் ரூ. 700 வரையிலும், சன்னமல்லி ரூ. 450 முதல் ரூ. 700 வரையிலும், ஜாதிமல்லி ரூ. 500 முதல் ரூ. 700 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி பூ கிலோ ரூ.140-லிருந்து ரூ. 240 வரை விற்பனையானது.
இதுகுறித்து பூ வியாபாரி சாமிக்கண்ணு கூறுகையில், ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்து காணப்படுவதாகத் தெரிவித்தார்.
35 ஆண்டுகளாக மாலை தொடுக்கும் தொழிலாளி:
கடந்த 35 ஆண்டுகளாக பூ மாலை தொடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ராஜன் கூறுகையில், “சாதாரண நாள்களில் ஒரு நாளைக்கு 40 முதல் 50 மாலைகள் வரை தொடுப்பேன். வேலை அதிகமாக இருக்கும் காலங்களில் இரவு, பகல் பாராமல் பணியாற்றுவோம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஆயுத பூஜைக்காக வரும் மக்களின் கூட்டம் சற்றுக் குறைவாகக் காணப்படுகிறது. இருப்பினும், பூஜை வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்பதால், மக்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
பூக்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களின் விலை உயர்ந்திருந்தாலும், ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகள், கடைகள், அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வழிபாடு நடத்துவதற்காகப் பொதுமக்கள் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர். இதனால், கோவை பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜை விற்பனை களைகட்டியது.

சந்தையில் பொருள்களை வாங்கிச் செல்லும் மக்கள். - படம் - தினமணி
Summary
The prices of puja items, including flowers, have increased due to the repercussions of the Ayudha Puja.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

