கைதிகள் தப்பியோட்டம்! தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மை, அலட்சியம்! டிடிவி தினகரன்
தேனியில் கைதிகள் தப்பியோடிய சம்பவத்துக்கு டிடிவி தினகரன் கண்டனம்...

முதல்வர் விஜய் - டிடிவி தினகரன் - கோப்புப் படம்
சிறைக் காவலர்களையே தாக்கிவிட்டுக் கைதிகள் தப்பியோடும் அளவிற்குப் பாதுகாப்புக் குறைபாடுகள் நிலவுவது, தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தேனி கண்டமனூர் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 17 பேரில் 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில் 13 பேரைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்துள்ள டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
”தேனி மாவட்டம், தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம் – தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்வது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தவெக அரசின் கையாலாகாத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தேனி மாவட்டம், தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 சிறைக் கைதிகள் தப்பியோடியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புழல் சிறையிலிருந்து இரு கைதிகள் தப்பியோடிய நிலையில், அச்சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தவெக அரசின் சட்டத் துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர், அத்துறைகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் சரிசெய்வதில் கவனம் செலுத்தாமல், தனது விளம்பர மோகத்திற்காகவும் தனது இருப்பைக் காட்டிக்கொள்வதற்காகவும் செலுத்தும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது தனது துறைகளின் செயல்பாடுகளில் காட்டியிருந்தால், தொடர் மின்வெட்டு முதல் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் வரை பல்வேறு பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியும்.
ஏற்கெனவே, தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடியிருப்பது மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் பதற்றத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.
சிறைச்சாலைகளில் போதிய எண்ணிக்கையில் காவலர்கள் பணியில் உள்ளனரா? கண்காணிப்புக் கேமராக்கள் முழுமையாகச் செயல்படுகின்றனவா? கைதிகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கான நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா? உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்கிறார்களா? இத்தகைய அடிப்படைக் கேள்விகள் எழுவதோடு சிறை நிர்வாகத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதாகக் கூறி, புழல் சிறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது அவரது ஆய்வின் நோக்கம் குறித்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. உண்மையிலேயே சிறை நிர்வாகத்தின் குறைபாடுகளைக் கண்டறிந்து களைவதற்காக ஆய்வு மேற்கொண்டாரா? அல்லது சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போல, ஜோதிடரின் அறிவுரைப்படி பரிகாரம் செய்வதற்காகச் சென்றாரா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
எனவே, சிறைக் காவலர்களையே தாக்கிவிட்டுக் கைதிகள் தப்பியோடும் அளவிற்குப் பாதுகாப்புக் குறைபாடுகள் நிலவுவது, தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், கண்காணிப்பில் நிலவும் அலட்சியத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள இச்சூழலில், தப்பியோடிய கைதிகளால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்பாக அவர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்வதோடு, மாநிலத்திலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும் எனச் சிறைத்துறையையும், இவ்விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Escape of prisoners : TVK government’s administrative incompetence and negligence – TTV Dhinakaran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


