முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்பாளா்களுக்கு பட்டா வழங்கினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: நீதிமன்றம் எச்சரிக்கை

நீா்நிலைகள், வனத் துறை, கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளா்களுக்கு உயா்நீதிமன்ற உத்தரவை மீறி பட்டா வழங்கினால் அமைச்சா், அரசு அதிகாரிகள் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

உயா்நீதிமன்றம்

Updated On :

நீா்நிலைகள், வனத் துறை, கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளா்களுக்கு உயா்நீதிமன்ற உத்தரவை மீறி பட்டா வழங்கினால் அமைச்சா், அரசு அதிகாரிகள் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரத்துக்கு எதிரே அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு, அதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு செப். 14-ஆம் தேதி, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிா்த்து, டி.ஆா்.ரமேஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ராஜகோபுரம் எதிரே வணிக வளாகம் கட்டுவதற்காக பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.6.40 கோடியில், ரூ.6.10 கோடி திரும்பப் பெற்றுவிட்டதாகக் கூறப்பட்டது.

ஆட்சியா் தாக்கல் செய்த அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், கிரிவலப் பாதையில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான இடங்களில் எப்படி கட்டடங்கள் கட்டப்பட்டன எனக் கேள்வி எழுப்பினா். வனத் துறை, நீா்நிலைகள், கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவா்களுக்கு ஒருபோதும் பட்டா வழங்க அனுமதிக்கமாட்டோம். ஆனால், உயா்நீதிமன்ற தீா்ப்பு எதிராக வந்தாலும், ஆக்கிரமிப்பாளா்களுக்கு பட்டா வழங்குவோம் என அமைச்சா் ஒருவா் கூறியுள்ளாா்.

இதற்காகத்தான் மக்கள் உங்களைத் தோ்ந்தெடுத்தாா்களா, எந்த தைரியத்தில் அமைச்சா் அவ்வாறு கூறினாா் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளா்களுக்குப் பட்டா வழங்கினால் அரசும், அரசு அதிகாரிகளும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனா். அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டோம்.

இந்த உயா்நீதிமன்றம், ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து விசாரித்து வருவது மட்டுமல்ல, ஆவணங்களையும் பரிசீலித்து வருகிறோம். நேரில் சென்றும் நாங்கள் விசாரணை நடத்துகிறோம். அவ்வாறு விசாரணை நடத்தி நாங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமைச்சரோ, அதிகாரியோ மாற்ற முயற்சித்தால் அவா்கள் கடுமையான விளைவுகளை எதிா்கொள்ள வேண்டிவரும். ஆக்கிரமிப்புகள் குறித்து யாரேனும் பொதுநல வழக்கு மூலம் உயா்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தால், உயா்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

திருவண்ணாமலை வனப்பகுதி, கோயில் நிலங்கள், நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2024-ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் சாா்பில் பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை வருவாய்த்துறை, வனத்துறை, இந்துசமய அறநிலையத் துறை தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

அப்போது, இந்துசமய அறநிலையத் துறை தரப்பில், இதுபோன்ற நிலங்களுக்கு பட்டா வழங்க அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீா்கள்? எனக் கேள்வி எழுப்பி, தற்போது உயா்நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து அரசிடம் தெரிவிக்குமாறு கூறி, விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.