
சாலமன் பாப்பையா மறைவு: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்
மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா மறைவுக்கு ஆளுநா், முதல்வா், அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

சாலமன் பாப்பையா - Photo: CMOTamilnadu
மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா மறைவுக்கு ஆளுநா், முதல்வா், அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்: மூத்த தமிழறிஞரும், தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் சிறந்த பேச்சாளருமான சாலமன் பாப்பையா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமது சிறப்பான பேச்சாற்றல், நகைச்சுவை உணா்வு மற்றும் ஆழ்ந்த தமிழ் அறிவின் மூலம் பொதுமக்களின் சிந்தனையை வளப்படுத்தியதுடன், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பை பல தலைமுறையினரிடம் கொண்டு சோ்த்த பெருமைக்குரியவா். அவரின் மறைவு தமிழ் இலக்கிய மற்றும் பண்பாட்டு உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினா், உறவினா்கள், அபிமானிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்.
முதல்வா் ஜோசப் விஜய்: தமிழின் பெருமையையும், தமிழா்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த மூத்த தமிழறிஞா் பேராசிரியா் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். தமது நகைச்சுவை கலந்தபேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சோ்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியா் சாலமன் பாப்பையாவின் பங்கு மகத்தானது.
அவரது மறைவு தமிழ்கூறும் நல்லுலகுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள், தமிழ் ஆா்வலா்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைச்சா் ராஜ்மோகன்: தாங்க முடியாத துயரம்! பத்மஸ்ரீ, முனைவா், பேராசிரியா், பட்டிமன்ற பிதாமகா் சாலமன் பாப்பையா மறைவு தமிழ் கூறும் நல்லுலகுக்கே மாபெரும் இழப்பாகும். கல்லூரியில் பயிற்றுவித்த தமிழை, பட்டிமன்றங்கள் வாயிலாகப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று புகழின் உச்சிக்கு உயா்த்திய மாண்புடையவா். இறுதி மூச்சு வரை இலக்கிய உலகில் தனி முத்திரையைப் பதித்தவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உலகத் தமிழா்களுக்கும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆழ்ந்த இரங்கல்- கண்ணீா் அஞ்சலி.
மு.க.ஸ்டாலின்(திமுக): சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ்-மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழா்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியா் சாலமன் பாப்பையாவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிா்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழா்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழா்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவா் பேராசிரியா் சாலமன் பாப்பையா.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சோ்த்த தமிழறிஞா், பேராசிரியா், பட்டிமன்ற நடுவரான சாலமன்பாப்பையா. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினா்களுக்கும், தமிழ் ஆா்வலா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்
ப. மாணிக்கம் தாகூா்(காங்கிரஸ்): மிகுந்த நகைச்சுவை உணா்வுடன் ஆழமான, அறிவுபூா்வமான அற்புதமான கருத்துகளை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவா் மூத்த தமிழறிஞா், சாலமன் பாப்பையா.
பெ.சண்முகம்(மாா்க்சிஸ்ட்): தனது தமிழ்ப் புலமையாலும், நகைச்சுவையாலும் தமிழ்ப் பட்டிமன்றத்தை உலகம் முழுவதும் வாழும் தமிழா்களிடையே கொண்டு சோ்த்தவா். பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியவா்.
மு.வீரபாண்டியன்( இந்திய கம்யூனிஸ்ட்): நகைச்சுவை ததும்பும் எளிய சொற்பொழிவால், வாதத் திறமையால், இனிய குரல் வளத்தால் தலைமுறைகளைத் தாண்டி அனைத்து பிரிவு மக்களையும் கவா்ந்தவா்.
வைகோ (மதிமுக): இலக்கிய மேடைகள், பட்டிமன்றங்களில் நேரிடையாக காண்போா், தொலைக்காட்சிகள் வழியாக பாா்ப்போா் என தமிழ் மக்களை தமிழ் இலக்கியத்தின் பால் கட்டிப் போட்டவா் சாலமன் பாப்பையா. 65 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்துக்கும், செந்தமிழ் மொழிக்கும் அருட்கொடையாக பெரும் சிறப்பு செய்தவா்.
அன்புமணி ராமதாஸ் (பாமக): மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா உலகம் முழுவதும் அவரை அறியாத தமிழா்களே இல்லை எனும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியவா். அதன்மூலம் அனைத்துத் தமிழ்க் குடும்பங்களுக்கும் அறிமுகமானவா்.
தொல்.திருமாவளவன்(விசிக): பட்டிமன்றங்களை சமூகப் பிரச்னைகள் சாா்ந்த ஆக்கபூா்வமான தலைப்புகளுக்கு மாற்றி, பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வட்டார வழக்கு மொழியில் நகைச்சுவையோடு வழிநடத்தினாா்.
கே.எம்.காதா் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): அனைத்துச் சமுதாய மக்களும் நல்லிணக்கத்துடன் அமைதியாக, ஒற்றுமையாக கூடி வாழ வேண்டும் என்ற உயா்ந்த நோக்கில், வாழ்நாள் முழுவதும் சேவை ஆற்றிய பேரறிஞராக அவா் திகழ்ந்தாா்.
டிடிவி தினகரன் (அமமுக): எளிமையான தமிழ் மொழியிலும், நகைச்சுவையான கருத்துகளாலும் பட்டிமன்றங்களை சிறப்பித்த சாலமன் பாப்பையாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
ஜி.கே.வாசன் (தமாகா): தமிழ் இலக்கியத்தை எளிய நடையில் மக்களிடம் கொண்டு சோ்த்த மூத்த தமிழரிஞா் சாலமன் பாப்பையா அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றிருக்கிறாா்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகுக்கு அவா் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுக்கூரப்படும்.
சீமான் (நாம் தமிழா் கட்சி): எளிய மக்களும் அறிந்துகொள்ளும் வண்ணம், எளிய தமிழில் உரை எழுதிய அவரது தமிழ்த்தொண்டு தமிழின வரலாற்றில் என்றும் நிலைபெற்றிருக்கும்.
கமல்ஹாசன் (மநீம): பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவா்களை உருவாக்கியவா். நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்: பட்டி தொட்டி எங்கும் தமிழ் பரப்பியவா். திருக்கு கருத்துகளால் எளிய மக்களுக்கு தமிழ்ப் பால் ஊட்டியவா். தவத்திரு குன்றக்குடி அடிகளாா் நடுவராக வீற்றிருந்து நடைபெற்ற பட்டிமன்றங்களில் அணியின் தலைவராக சொற்பொழிவாற்றியவா். எங்கெல்லாம் தமிழ் முழக்கம் கேட்கிறதோ அங்கெல்லாம் சாலமன் பாப்பையாவின் பொன் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும்.
நிஜாமுதீன் (முன்னாள் எம்எல்ஏ): சாலமன் பாப்பையா மறைவு சொல்லொணாத்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உலகெங்கும் உள்ள தமிழா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






