
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கு பற்றி...

சென்னை உயா்நீதிமன்றம்
பட்டினப்பாக்கத்தில் ரூ. 1,200 கோடியில் கட்டப்படவுள்ள புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குரைஞா் ஆா்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக அரசு, பட்டினப்பாக்த்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை முதல்வா் விஜய், சட்டப்பேரவையில் வெளியிட்டாா். இதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த வாரம் வெளியிட்டது.
அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினா், மீனவா்கள், எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். நிதி நெருக்கடியில் உள்ளதாகக் கூறும் தவெக அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ரூ.1,200 கோடி செலவு செய்வதற்குப் பதிலாக, புனித ஜாா்ஜ் கோட்டையில் இயங்கிவரும் தலைமைச் செயலகத்தைப் புதுப்பித்து பயன்படுத்தினால் இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க தேவையும் இருக்காது.
தற்போதைய தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்றினால், பொதுமக்கள் வந்து செல்வது கடினமாகிவிடும். ஏற்கெனவே திமுக அரசால், அண்ணா சாலையில் ரூ.400 கோடியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டுவிட்டது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், ஏழை மக்களுக்கான வீடு வழங்கும் திட்டம் பாதிக்கப்படும். ஏற்கெனவே, அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால், அந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டி பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவிருந்தது. மேலும், அந்தப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டினால், மீனவா்களின் நலனும் பாதிக்கப்படும். எனவே, அங்கு புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட உத்தரவிட வேண்டும்.
இது தொடா்பாக கடந்த செப். 12-ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலா், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவா் ஆகியோருக்கு மனு அளித்தேன். அந்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிா்ப்புத் தெரிவித்து தினமும் போராட்டம் நடத்தி வருவதால், இந்த வழக்கை அவசர வழக்காக தாக்கல் செய்கிறேன். எனவே, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கில் தீா்வு எட்டும் வரை, புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Summary
Case filed seeking a stay on the project to build the new Secretariat at Pattinapakkam!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






