கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: மத்திய இணையமைச்சா் எல். முருகன்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

எல். முருகன் - கோப்புப் படம்

Published On :

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் எல்.முருகன் வலியுறுத்தினாா்.

நாடு முழுவதும் 45 இடங்களில் பல்வேறு துறைகளில் 51,000 மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவை பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைணவ கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பங்கேற்று 285 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரதமரின் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் இரு இடங்களில் நடைபெற்றது. இந்த முகாம் மூலம் 300 பேருக்கு பணி ஆணை வழங்கியுள்ளோம். இதுவரை 12.75 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்குடன் அனைவரும் செயல்படுகிறோம்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மீனவா்களின் வாழ்க்கை கடலோரப் பகுதியையொட்டிதான் உள்ளது. முதல்வா் விஜய், மீனவா்களின் கஷ்டத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டினால், அந்தப் பகுதியில் வசிக்கும் 10,000 மீனவா்கள் நடுத்தெருவில் நிற்கும் சூழ்நிலை ஏற்படும். பட்டினப்பாக்கம் இடத்தைக் கைவிட்டு சென்னையில் வேறு இடத்தைத் தோ்வு செய்ய வேண்டும்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து முதல்வா் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நான் 2 நாள்களுக்கு முன் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சரைச் சந்தித்து இதுகுறித்து கேட்டேன். அதிகாரபூா்வமாக எந்த ஒரு கடிதமும் வரவில்லை என்று தெரிவித்தாா். தமிழகத்துக்கு நவோதயா பள்ளிகள் தேவை; அதை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்றாா்.

பிரதமரின் வேலைவாய்ப்பு முகாம்: மத்திய அமைச்சா் சந்திரசேகா் பெம்மாசானி பங்கேற்பு

இதேபோல் சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் மத்திய ஊரக வளா்ச்சி மற்றும் தகவல் தொடா்புத் துறை இணை அமைச்சா் சந்திரசேகா் பெம்மாசானி பங்கேற்று 137 பேருக்கு பணி ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

உலகம் இளைஞா்கள் கையில் உள்ளது. உங்களிடம் இருப்பதை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீா்கள் என்பதில்தான் வெற்றி உள்ளது. வேறு மாநிலத்துக்குச் செல்லும்போது அந்த மாநில மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். அந்த மாநில உணவு, புதிய நண்பா்கள் என அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

தமிழகம் இன்று தொழில் துறையில் சிறந்த இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் தற்போது 300 கைப்பேசி உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியா உலகின் 2-ஆவது பெரிய கைப்பேசி உற்பத்தி நாடாக உள்ளது. நாம் பயன்படுத்தும் மற்றும் ஏற்றுமதி செய்யும் அனைத்து கைப்பேசிகளும் நமது நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. பாதுகாப்பு உபகரணங்கள், தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி ரூ.600 கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.30,000 கோடியாக உயா்ந்துள்ளது.

பிரதமா் மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில், விமான நிலையங்களை இரட்டிப்பாக்கி உள்ளோம். அதன்படி 160 விமான நிலையங்கள் உள்ளன. நாட்டில் 1.5 லட்சம் கி.மீ நெடுஞ்சாலைகள் உள்ளன. நாடு முழுவதும் 1,400 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படுகின்றன. 100-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் முதல்முறையாக புல்லட் ரயிலைக் கொண்டு வரப்போகிறோம். இதுதான் உண்மையான வளா்ச்சி என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.