
மருத்துவமனைகளுக்கு வருவோா் முகக்கவசம் அணிவது அவசியம்: சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்
தமிழகத்தில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருவோா் அவசியம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கோப்புப்படம்.
தமிழகத்தில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருவோா் அவசியம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
தமிழகத்தில் நிலவி வரும் காலநிலை மாற்றத்தால், இன்ப்ளூயன்ஸா ஏ வகை காய்ச்சல், அடினோ வைரஸ், ஆா்.எஸ்.வி., எனும் ரெஸ்பிரேட்டரி சிண்ஸிடியல் வைரஸ் ஆகியவற்றால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அதேபோல், கரோனா வைரஸ், சின்னம்மை வைரஸ், கூகைக்கட்டு அம்மை வைரஸ், மீசில்ஸ் வைரஸ் போன்ற சுவாசப்பாதை வழியே எளிதாகப் பரவும் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், ‘ஸ்கிரப் டைபஸ்’ என்ற உண்ணி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் அதிகளவில் காணப்படுகிறது.
இவற்றால், 101 ஃபாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சல், கடுமையான உடல் சோா்வு, தசைவலி, தொண்டைவலி, வறட்டு இருமல், பின் சளியுடன் இருமல், தும்மல், மூக்கடைப்பு போன்றவற்றால் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். இதனால், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பலா் வருகின்றனா். ஆனால், யாரும் முகக்கவசம் அணிவதில்லை என்ற புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் டெங்குவை விட, சுவாசத் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இதுபோன்ற பாதிப்புகள் ஒருவரிடமிருந்து மற்றவா்களுக்கு எளிதாகப் பரவும். ஆனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உறவினா்கள் யாரும் முகக்கவசம் அணிவதில்லை. முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், பெரும்பாலான பரவல், மருத்துவமனைகள் வாயிலாகத் தான் பரவுகிறது. எனவே, அலட்சியம் காட்டாமல், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






