
இடைத்தேர்தலை மக்கள் மீது திணித்தது திமுக, அதிமுகதான்! துரை வைகோ
கோவை விமான நிலையத்தில் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தது பற்றி...

துரை வைகோ - Dinamani
திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி அமைக்க முயற்சித்ததுதான் இடைத்தேர்தலுக்கு காரணம் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரின் வெற்றிக்காகப் பணியாற்ற உள்ளதாக அவர் தெரிவித்தார்.
திமுக, அதிமுகவினரின் பிரசாரங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் பிரசாரங்களில் கருத்தியல் ரீதியான விவாதங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், அதுவே நாகரிகமான அரசியல் என்றும் குறிப்பிட்டார். ஆனால், தற்போது ஆபாசமான மற்றும் இரட்டை அர்த்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
தொண்டர்களைப் பக்குவப்படுத்த வேண்டிய தலைவர்களே இவ்வாறு பேசுவதாகவும், ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பது கட்சியின் முன்னணி தலைவர்களுக்கே இல்லை என்றும் அவர் விமர்சித்தார். மேலும், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு தான் பொறுப்பல்ல என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் விவகாரம் மற்றும் அரசின் அணுகுமுறை குறித்துப் பேசிய அவர், பரந்தூர் விமான நிலையம் விவசாயிகளைப் பாதிக்கும் என்பதால் அரசு எடுத்த மாற்று முடிவு எப்படி வரவேற்கப்பட்டதோ, அதேபோல் பட்டினப்பாக்கம் விவகாரத்திலும் முதலமைச்சர் மாற்று அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் கூறும் கருத்துகளை அரசு திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த துரை வைகோ, இந்த இடைத்தேர்தலை மக்கள் மீது திணித்தது திமுகவும் அதிமுகவும் தான் எனக் குற்றம்சாட்டினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாகவும், அவர்கள் இணைய முயன்றதாலேயே இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாபஸ் பெற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாகவும், அதனால்தான் இந்த இடைத்தேர்தல் வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
பாஜகவுக்கு எதிராக வாக்கு கேட்டுவிட்டு, அவர்களுடன் கூட்டணியில் இருந்த அதிமுகவுடன் சேர முயன்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
காதர் மொய்தீன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் நேர்மையை ஒருபோதும் சந்தேகிக்கக் கூடாது என்ற அவர், ஆதாரம் திரட்டுவதற்காக டேப் ரெக்கார்டரை மறைத்து வைத்து எடுத்துச் செல்லும் இழிவான செயல்களில் தாங்கள் ஈடுபட மாட்டோம் எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
தேசிய அரசியல் நிலவரம் குறித்துக் குறிப்பிட்ட அவர், பாஜகவுடன் சிலர் ரகசியமாகப் பேசி முடித்துவிட்டதாகவும், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் இது வெளிப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தில்லியில் மூன்றாவது அணி உருவாவது ஆளும் பாஜகவுக்கே சாதகமாக அமையும் என்றும் துரை வைகோ திட்டவட்டமாகக் கூறினார். “பவர் சென்டர்” என்பவர்கள் தான் பேரம் பேசுகிறார்கள் என்றும், அவர்கள் யார் என்பதைத் தற்போதைக்கு நான் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




