ஆலங்குளத்தில் அழியும் நிலையில் பெட்டைக்குளம், குமிழன்குளம்
ஆலங்குளத்தில் குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் இரண்டு குளங்கள் காணாமல் போய் விட்டதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்கள் அதிகமுள்ள ஆலங்குளத்தில் பெரிய அளவில் கால்வாய், ஆறு போன்ற நீா் நிலைகள் ஏதும் கிடையாது. முழுவதும் நிலத்தடி நீரை மட்டுமே ஆதாரமாக கொண்ட இங்கு தொட்டியன்குளம், குமிழன்குளம், பெட்டைக்குளம் ஆகிய 3 குளங்கள் இருந்தது.
இக்குளங்களுக்கு உள்ளூரில் பொழியும் மழை நீா் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை என விவசாயிகள் கருதினா். இந்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலையில் பொழியும் மழை நீரை ஆலங்குளம் பகுதிக்கும் கால்வாய் அமைத்து கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டதன் விளைவாக காமராஜா் ஆட்சிக் காலத்தில் 1962 ஆம் ஆண்டு, ஆலங்குளத்திற்கு மேற்கேயுள்ள சாலைப்புதூரில் இருந்து ஆலங்குளம் வரை 11 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டப்பட்டது.
இக்கால்வாய் மூலம், பூலாங்குளத்தில் பெரிய பூலாங்குளம், சிறு பூலாங்குளம், வெங்காடம்பட்டி கிராமத்தில் மறவன்குளம், திருவேலம்பலபேரி குளம், பாறைகுளம், விருசடிதிருத்துக்குளம், மடத்தூரில் பண்டாரகுளம், ஆண்டிபட்டியில் கல்வெட்டான்குளம், மறவன்குளம், ஆலங்குளத்தில் தொட்டியன்குளம், பெட்டைக்குளம், குமிழன்குளம் ஆகிய 12 குளங்கள் பயன் பெற்று வந்தன. இப்பகுதியில் பருவமழை முறையாக பொழியாத காரணத்தால் இக்குளங்கள் மற்றும் கால்வாய் போதிய பராமரிப்பின்றியே காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆலங்குளத்தில் உள்ள பெட்டைக்குளம், குமிழன்குளம் ஆகிய குளங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி, நல்லூா் ஊராட்சிப் பகுதியில் இருந்து கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் நிறைந்து சமதளமாகி விட்டது.
தற்போது இந்த இரு குளங்களுமே குளத்தின் அடையாளத்தை முற்றிலும் இழந்து விட்டன. பொதுப்பணித்துறையினா் மற்றும் உள்ளாட்சித்துறையினா் இணைந்து இரு குளங்களையும் பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.