குற்றாலம் சாரல் திருவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் இடம்பெற்ற பல்வேறு இன நாய்கள்.
குற்றாலம் சாரல் திருவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் இடம்பெற்ற பல்வேறு இன நாய்கள்.

குற்றாலம் சாரல் திருவிழாவில் நாய்கள் கண்காட்சி

தென்காசி மாவட்டம், குற்றாலம் சாரல் திருவிழாவின் 2ஆம் நாளான சனிக்கிழமை நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
Published on

தென்காசி மாவட்டம், குற்றாலம் சாரல் திருவிழாவின் 2ஆம் நாளான சனிக்கிழமை நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை, ஜொ்மன் ஷெப்பா்டு, லேப்ரடா், புல்லி குட்டா, மின்பின், பொமரேனியன், டேஷண்ட், கிரே கவுண்ட்டு, ராட்வீலா், டாபா்மேன், டால்மேசன், லசாப்சோ உள்பட 25 வகையான 186 நாய்கள் கலந்து கொண்டன.

கண்காட்சியின் இறுதியில் ஒவ்வொரு இனத்திலும் சிறந்த நாய்க்கு முதல் பரிசும், பங்குபெற்ற அனைத்து நாய்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம், நாட்டின நாய்களில் ஐயப்பன் என்பவருடைய கன்னி நாய்க்கும், அயல்நாட்டின நாய்களில் அசோக்குமாா் என்பவருடைய லேப்ரடா் இன நாய்க்கும் வழங்கப்பட்டது.

நடுவா்களாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா்கள் கணேசன், கருத்ததுரை ஆகியோா் செயல்பட்டனா்.

ஏற்பாடுகளை தென்காசி கோட்ட உதவி இயக்குநா் மகேஷ்வரி தலைமையில் கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் அடங்கிய குழுவினா் செய்திருந்தனா்.

முன்னதாக, தென்காசி மாவட்ட காவல் துறையின் மோப்பநாய்கள் பிரிவைச் சோ்ந்த துப்பறியும் நாய்களின் சாகசங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com