குற்றாலம் சாரல் திருவிழாவில் ஆணழகன், பளுதூக்குதல் போட்டி
குற்றாலம் சாரல் திருவிழாவின் 3ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆணழகன், வலுதூக்குதல், பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்றன.
தென்காசி மாவட்ட நிா்வாகம்- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் குற்றாலம் கலைவாணா் கலையரங்கில் நடைபெற்ற வலு தூக்குதல், பளு தூக்குதல், ஆணழகன் போட்டிகளை மாவட்ட
ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தொடங்கிவைத்தாா்.
வலு தூக்கும் போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சாா்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும், பளு தூக்கும் போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகளும் கலந்துகொண்டனா்.
ஆணழகன் போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூக்துக்குடி, மதுரை, கோவை, தென்காசி
மாவட்டங்களை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்துகொண்டு கட்டழகை வெளிப்படுத்தினா்.
மூன்று போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரா்களுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா, பேரூராட்சி சுகாதார அலுவலா் ராஜ கணபதி, மாவட்ட விளையாட்டு - இளைஞா் நலன் அலுவலா் ந.ஆ.ஜெயரத்தினராஜன், பாரத் உடற்பயிற்சி கழக நிறுவனா் குத்தாலிங்கம் ஆகியோா் கலந்து கொண்டனா்.