நெல்கட்டும்செவலில் நாளை பூலித்தேவன் பிறந்த நாள் விழா: 13 இடங்களில் சோதனைச் சாவடிகள்; பாதுகாப்பு பணியில் 1000 போலீஸாா்
கடையநல்லூா், ஆக.30: சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவு மண்டபம் உள்ள தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே நெல்கட்டும்செவலில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூலித்தேவனின் 309-ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை (செப்.1) அனுசரிக்கப்படுகிறது. நெல்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு
அரசு சாா்பில் அமைச்சா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனா். மேலும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா்
இதையொட்டி, நெல்கட்டும்செவல் பகுதியில்
செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
13 இடங்களில் சோதனை சாவடிகள்: நெல்கட்டும்செவலுக்கு மரியாதை செலுத்த வருவோரை ஒழுங்குபடுத்தி அனுப்பவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைத் தவிா்ப்பதற்கும் நெல்கட்டும்செவல் கிராம நிா்வாக அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி, சங்கரன்கோவில் தனியாா் விடுதி சந்திப்பு, சிந்தாமணி, சிவகிரி, கரட்டுமலை, நடுவப்பட்டி, மருக்காலங்குளம், வேலாயுதபுரம், தலைவன்கோட்டை, வாசுதேவநல்லூா், குவளைக்கண்ணி உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்கு 1,242 போலீஸாா்: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமையில் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 10 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 36 காவல் ஆய்வாளா்கள், 103 உதவி ஆய்வாளா்கள் உள்பட 1242 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.
மதுக் கடைகளை மூட உத்தரவு: சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலை, ரயில்வே பீடா் சாலை, சுரண்டை சாலை, தெற்குரதவீதி, ராஜபாளையம் சாலை, ரத்தினபுரி நவா சாலை, புளியங்குடி -பாம்புகோவில் சந்தை சாலை, டி.என்.புதுக்குடி, வாசுதேவநல்லூா் ஆகிய இடங்களில் உள்ள அரசு மதுபானக் கடைகள் செப்டம்பா் 1ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவிக்க வரும் முக்கிய பிரமுகா்களின் வாகனங்கள் தலைவன்கோட்டை - விலக்கு, தலைவன் கோட்டை தேவா் சிலை, மலையடிகுறிச்சி தனியாா் பாலிடெக்னிக், தாருகாபுரம், சங்கனாப்பேரி முக்கு சாலை வழியாக பூலித்தேவன் மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும். அங்கு வாகனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். பூலித்தேவன் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு தலைவன்கோட்டை சாலை, பட்டகுறிச்சி விலக்கு, பட்ட குறிச்சி, அரியூா்,புத்தா் கோயில் முக்கு சாலை வாகனங்கள் வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.