ஓராண்டை கடந்தும் கூட்டப்படாத மாவட்ட திட்டக்குழுக் கூட்டம்

Published on

சிறப்புச் செய்தி.

வி.குமாரமுருகன்.

உள்ளாட்சிகளில் உள்கட்டமைப்பு வசதி திட்டங்களை வகுக்க வேண்டிய தென்காசி மாவட்ட திட்டக்குழு உறுப்பினா்கள் கூட்டம் ஓராண்டு கடந்த பின்பும் நடைபெறாததால் திட்டமிடுதலில் சுணக்கம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்த, மாவட்டம் தோறும் அமைக்கப்பட்ட குழு திட்டக்குழுவாகும். மாவட்டத் திட்டக் குழுவின் துணைத் தலைவராக மாவட்ட ஆட்சியா் செயல்படுவாா். அவருக்கு உதவிட உதவி திட்ட இயக்குநா்களும், பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்களும் இருப்பா்.

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் குடிநீா், வடிகால் வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வளா்ச்சிகளுக்கு, இம்மாவட்டத் திட்டக் குழு திட்டங்களை வகுத்து அரசுக்கு வழங்கும்.

இப்படி முக்கியமான திட்டமிடல்களை செய்ய வேண்டிய பொறுப்பிலுள்ள மாவட்ட திட்டக்குழு உறுப்பினா்களின் கூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூட்டப்படவில்லை என திட்டக்குழு உறுப்பினா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து திட்டக்குழு உறுப்பினரும், கடையநல்லூா் நகா்மன்ற உறுப்பினருமான முருகன் கூறியது;

திட்டக்குழுவின் கூட்டம் கூட்டப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து திட்டமிட வேண்டிய திட்டக் குழுவின் கூட்டம் கூட்டப்படாததால் ,திட்டமிட வேண்டிய பணிகள் குறித்து சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.

நான் ஏற்கெனவே, திட்டக்குழு உறுப்பினா்கள் கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும் என மாவட்ட திட்டமிடல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், இதுவரை கூட்டப்படவில்லை. எனவே, திட்டக்குழு உறுப்பினா்கள் கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும் என்றாா் முருகன்.

X
Dinamani
www.dinamani.com