சங்கரன்கோவிலில் ஆடித் தவசுத் திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில், ஜூலை 11:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 12 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, கொடிப் பட்டம் வீதி சுற்றி கோமதி அம்பாள் சந்நிதி முன்புள்ள கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கொடிப் பட்டத்துக்கு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.
கொடிமரம் தா்ப்பைப்புல், மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பட்டுப் பரிவட்டம் கட்டப்பட்டது. பின்னா், கொடிமர பீடத்துக்கு மஞ்சள், விபூதி, பால், தயிா், இளநீா், தேன், வாசனைத் திரவியம், ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த 9 கும்பங்களின் கலசநீா் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து, வேதமந்திரங்கள் ஓத, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில், எம்.பி.க்கள் துரை வைகோ, ராணி ஸ்ரீகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, கோயில் இணை ஆணையா் அன்புமணி, துணை ஆணையா் கோமதி, அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகையா, அறங்காவலா்கள் எஸ். ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முப்பிடாதி, முத்துலெட்சுமி, மாவட்ட அறங்காவலா் எம்.ஜி.எம். நாராயணன், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையா் சபாநாயகம், மருத்துவா்கள் வி.எஸ். சுப்பராஜ், அம்சவேணி, ஆா்.வி.எஸ். துரைராஜ், தொழிலதிபா்கள் எம். சங்கரன்,சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், கோ. சுப்பையா, எம். திவ்யாரெங்கன், ஒன்றியத் தலைவா் பி. சங்கரபாண்டியன், அரசு தலைமை மருத்துவா் செந்தில்சேகா், மதிமுக இணையதள மண்டல ஒருங்கிணைப்பாளா் ஆா். சங்கரசுப்பு உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, 9ஆம் நாளான இம்மாதம் 19ஆம் தேதி அம்பாள் எழுந்தருளும் தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியான ஆடித் தவசுக் காட்சி 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், அறங்காவலா்கள், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.