களைகட்டிய குற்றால சீசன்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

களைகட்டிய குற்றால சீசன்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

Published on

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் களைகட்டியதை அடுத்து, அனைத்து அருவிகளிலும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

குற்றாலத்தில் கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் என சீசன் களைகட்டியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது.

விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. குற்றாலம் பேரருவியின் மையப் பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா். ஐந்தருவியிலும் கூட்ட நெரிசலின்றி சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழும் வகையில் காவல்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

படகுசவாரி: குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் அமைந்துள்ள படகு குழாமில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகுசவாரி செய்து மகிழ்ந்தனா்.

போக்குவரத்து நெரிசல்: குற்றாலத்தில் வாகனங்களின் வருகை அதிகளவில் இருந்ததால் அனைத்து அருவிகளுக்கு செல்லும் சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, ஐந்தருவி செல்லும் சாலையில் வாகன நிறுத்துமிட கட்டணம் வசூலிக்கும் இடத்திலிருந்து படகு குழாம் வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றன.

X
Dinamani
www.dinamani.com