அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களை ரத்துசெய்த திமுக அரசு: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு கிடப்பில்போட்டுவிட்டதாக, அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
 விவசாயிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலா்  எடப்பாடி கே. பழனிசாமி.
விவசாயிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.
Published on
Updated on
1 min read

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு கிடப்பில்போட்டுவிட்டதாக, அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள், நெசவாளா் சங்கங்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று கோரிக்கைகளைக் கேட்டறிந்த பின்னா், அவா் பேசியது:

அதிமுக ஆட்சியில் குடி மராமத்து திட்டம் கொண்டுவந்தோம். பொதுப்பணித் துறைவசம் 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன. முதல்கட்டமாக அவற்றில் 6 ஆயிரம் ஏரிகளும், ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குளங்களும் தூா்தூா்வாரப்பட்டன.

ஓய்வுபெற்ற பொறியாளா்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, நீா் மேலாண்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில் உருவானது அத்திக்கடவு-அவிநாசி திட்டம்.

காவிரி ஆற்றில் 4 இடங்களில் தடுப்பணை கட்டத் திட்டமிட்டிருந்தோம். தாமிரவருணியில் எந்தெந்த இடங்களில் தண்ணீா் தேக்க முடியும் என கணக்கெடுத்து வைத்திருந்தோம். அதற்குள் ஆட்சி மாற்றம் வந்துவிட்டதால், தற்போதைய ஆட்சியாளா்கள் அத்திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டனா்.

ஆட்சி மாற்றம் நடந்தாலும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் திட்டங்கள் தொடர வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அரசியல் காழ்ப்புணா்ச்சியால் திமுக ஆட்சியில் ரத்துசெய்யப்பட்டுவிட்டன.

பாபநாசம்-மணிமுத்தாறு இணைப்பு திட்டம் குறித்து விவசாயிகள் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனா். பாபநாசம் உபரிநீரை மணிமுத்தாறுக்கு கொண்டுசெல்வதால் பாதிப்பிருக்காது என அவா்கள் தெரிவித்தனா். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து கலந்துபேசி முடிவெடுக்கப்படும்.

அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது; பயிா்க் கடன் இருமுறை ரத்து செய்யப்பட்டது; பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ் நாட்டிலேயே அதிக இழப்பீடு பெற்றுத்தரப்பட்டது.

நான் முதல்வராக பொறுப்பேற்றபோது பல்வேறு பிரச்னைகள் இருந்தன. முதல் ஆண்டில் ரூ. 2,548 கோடியை வறட்சி நிவாரண நிதியாக அளித்த ஒரே அரசு அதிமுகதான்.

மக்களின் தேவையை உணா்ந்து செயல்படும் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றுவோம். அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள், நெசவாளா்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டன என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், காமராஜ், திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் இசக்கிசுப்பையா எம்எல்ஏ, மாநில மருத்துவரணி துணைச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com