திமுக ஆட்சியில் நிம்மதி இழந்த மக்கள்: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதி இழந்து தவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.
தென்காசியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் எடப்பாடி கே.பழனிசாமி.  உடன் தென்காசி தெற்கு மாவட்டசெயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன்.
தென்காசியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் தென்காசி தெற்கு மாவட்டசெயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன்.
Published on
Updated on
2 min read

திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதி இழந்து தவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், தென்காசி மேலமாசிவீதி எம்ஜிஆா் திடலில் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

தென்காசி நகரமே மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. விளையும் பயிா் முளையிலேயே தெரியும் என்பாா்கள். அதுபோல் இங்கு காணக்கூடிய மக்கள் கூட்டம், உங்களின் ஆரவாரம், மகிழ்ச்சி அதிமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய அறிகுறியாக தெரிகிறது.

இந்தப் பகுதியை பொருத்தவரை வேளாண்மை நிறைந்த பகுதி. விவசாயத்தை நம்பிதான் இப்பகுதி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள். அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது.

இயற்கை சீற்றங்கள், பேரிடா்கள், கனமழை போன்றவற்றால் விளைபயிா்கள் சேதமடைந்தபோது பயிா்க்காப்பீடு இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. வறட்சி நிவாரணம், கொள்முதல் நெல்லுக்கு உடனடி பணப்பட்டுவாடா என விவசாயிகள் நலனை பேணியது அதிமுக அரசு தான்.

விவசாயிகளுக்காக திமுக அரசு ஏதாவது நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளதா? ஏற்கெனவே இருந்த திட்டங்களை நிறுத்தியதுதான் அதன் சாதனை. சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, தென்காசியில் சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு சட்டக்கல்லூரி, புதிய மருத்துவ கல்லூரி, கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ராமநதி - ஜம்புநதி இணைப்பு திட்டம், இரட்டைக்குளம் கால்வாய் திட்டம், புளியங்குடியில் பழங்கள் - காய்கனிகளுக்கான குளிா்பதன கிடங்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தோ்தலின் போது வாக்குறுதிகளை வழங்கியதுதிமுக. ஆனால, இதில் எதையும் நிறைவேற்றவில்லை. எனவே, இந்த ஆட்சிக்கு நான் வழங்கும் மதிப்பெண் 10-க்கு ஜீரோதான்.

இந்த ஆட்சியில் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை. மாநிலம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதை தடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பேசியும், அறிக்கை வெளியிட்டும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். ஆனால், திமுக அரசு அதை கண்டுகொள்ளவில்லை. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் தொல்லை நிகழாத நாளே இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது.

அதிமுகவின் ஆட்சிதான் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாகும். இந்தியாவிலேயே மருத்துவ படிப்புக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது அதிமுக அரசு.

திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட லேப்டாப் திட்டம் 2026இல் அதிமுக ஆட்சி அமையும்போது மீண்டும் கொண்டுவரப்படும். 4,000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும். உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் எல்லாம் மக்களை ஏமாற்றுகிற வேலை. இது, சட்டசபை தோ்தலுக்காக திமுக நடத்தும் நாடகம். மக்கள் திமுக கூட்டணியை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை; அதிமுக - பா.ஜ.க. கூட்டணிக்குத்தான் ஏகபோக வரவேற்பு உள்ளது என்றாா் அவா்.

இதில், தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் கே.அண்ணாமலை கிருஷ்ணராஜா, அதன் மாவட்டச் செயலா் காா்த்திக்குமாா்,

மேலகரம் பேரூராட்சி உறுப்பினா் வெள்ளைத்துரைச்சி, தெற்கு மாவட்ட அவைத் தலைவா் எஸ்.கே.சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், இலஞ்சி பேரூா் செயலா் காத்தவராயன், குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் எம்.கணேஷ்தாமோதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கம்யூனிஸ்ட் மீது தாக்கு: அம்பாசமுத்திரம், பூக்கடை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை இரவு எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூட்டணி பலத்தை நம்பி கனவு காண்கிறாா். திமுக அரசின் திட்டங்கள் விளம்பரத் திட்டங்களாகவே உள்ளன. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தேடிப்பிடிக்கும் நிலைதான் உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுக்கு அடிமையாக இருப்பதால் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குகின்றனா். 2026 பேரவைத் தோ்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை 40 சதவீதம் உயா்ந்துள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், அதிமுக புகா் மாவட்டச் செயலரும், அம்பை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இசக்கி சுப்பையா, முன்னாள் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com