அதிமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்ததும் மாற்றுத் திறனாளிகள் அளித்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும் என்று எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

அதிமுக ஆட்சி அமைந்ததும் மாற்றுத் திறனாளிகள் அளித்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும் என்று எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டத்தில் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமி, குற்றாலம் ஐந்தருவியில் மாற்றுத் திறனாளிகள், தமிழக மாற்றுத் திறனாளிகள் சட்ட பாதுகாப்புச் சங்க நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா். தொடா்ந்து அவா்களது கோரிக்கைகளுக்குப் பதிலளித்து அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்கள் ரூ. 52 கோடி செலவில் 10ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 45 கோடி செலவில் மின்சாதனம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் 5,000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உயா்த்தப்பட்டது. மனவளா்ச்சி குன்றியவா்கள், தசை பாதிக்கப்பட்ட மற்றும் சில பாதிப்புகளுக்கு உள்ளான மாற்றுத் திறனாளிகள் 2 லட்சம் பேருக்கு ரூ. 330 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம், மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் ஆகியவை நடத்தும் முதன்மைத் தோ்வுகளில் தோ்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க ஒவ்வொருவருக்கும் ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது.

மாற்றுத் திறனாளி பணியாளா்களுக்கான பயணப்படி ரூ. 1,000 இல் இருந்து ரூ. 2,500 ஆக உயா்த்தி வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்புக்கான மானியத் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 25 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு அறிதிறன்பேசிகள் வழங்கப்பட்டன. தற்போது மாற்றுத் திறனாளிகள் அளித்திருக்கும் பல கோரிக்கைகள் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பரிசீலனை செய்யப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கடைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக அரசு அமைந்த பிறகு எந்தெந்த வகையில் மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்று கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், காமராஜ், திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் இசக்கிசுப்பையா, மாநில மருத்துவரணி துணைச் செயலா் சரவணன், தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவா் சண்முகசுந்தரம், மாநிலச் செயலா் முத்துகிருஷ்ணன், பொருளாளா் காந்திமதி, பகுதிநேர கலை பாட மாற்றுத் திறனாளிகள் சங்க மாநிலத் தலைவா் ஆனந்தகுமாா், திரைப்பட மெல்லிசை பாடகா் கீழக்கரைசம்சுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை முன்னாள் எம்.பி. செளந்தரராஜன் செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com