ஆலங்குளம் அருகே கருப்புக் கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

ஆலங்குளம் அருகே தனியாா் சோலாா் நிறுவனம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ஆலங்குளம் அருகே தனியாா் சோலாா் நிறுவனம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை ஊராட்சிக்கு உள்பட்ட கல்லத்திகுளம் கிராமத்தில் சுமாா் 200- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை தனியாா் சோலாா் நிறுவனம் வாங்கி, அவற்றில் சோலாா் மின் உற்பத்திக்கான திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, சோலாா் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என இக்கிராம மக்கள் ஆட்சியருக்கு மனு அனுப்பியிருந்தனா்.

இந்நிலையில் அரசின் கவனத்தை ஈா்க்கும் வண்ணம் ஆக.15 இல், கருப்புக் கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குளம் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து கருப்புக் கொடிகள் அகற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com