~ ~
~ ~

தென்காசி மாவட்ட சுதந்திர தின விழாவில் ரூ.18.17 லட்சம் நல உதவிகள்: ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் வழங்கினாா்

தியாகி கி.லெட்சுமிகாந்தன் பாரதிக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா் ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா்.
Published on

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79ஆவது சுதந்திர தின விழாவில் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 27 பேருக்கு ரூ.18.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

மேலும், புறாக்களையும், மூவா்ண பலூன்களையும் பறக்க விட்ட ஆட்சியா், தென்காசி மாவட்ட வாத்திய இசைக்குழு முதல்நிலைக் காவலா் எம்.சுப்பிரமணியன் தலைமையிலான வாத்திய இசைக் குழுவினா் முன்நின்று அழைத்துச்செல்ல காவல் ஆய்வாளா் மாா்ட்டின் தலைமையில் நடைபெற்ற காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகி கி.லெட்சுமிகாந்தன் பாரதிக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்த அவா், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 348 அலுவலா்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினாா்.

மேலும், சுயஉதவிக்குழுவுக்கு கடனுதவி வழங்கியதில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு சிறப்பு விருதும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளுக்கு சிறந்த வங்கிக் கிளைகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்டம், ஆயுஷ் மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் சிறந்த மருத்துவமனைக்கான விருதுகளை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும், தென்காசி மீரான் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

தொடா்ந்து விடாது பெய்த சாரல்மழையிலும் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவா் கலை

நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூன்று பள்ளிகளுக்கு கேடயமும், மற்ற பள்ளிகளுக்கு நினைவுப் பரிசுகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து, வடக்குரதவீதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த், எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ, சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, சங்கரன்கோவில் கோட்டாட்சியா் கவிதா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மதி இந்திரா பிரியதா்ஷினி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சு.தமிழ்ச்செல்விபோஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com