பாண்டியராஜா
பாண்டியராஜா

காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தென்காசியில் அமல்படுத்த கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
Published on

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா் பாண்டியராஜா, ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 சில்லரை கடைகள் வாயிலாக பீா், மது வகைகளை விற்கிறது. குடிமகன்கள் மதுவை அருந்திவிட்டு, காலி கண்ணாடி பாட்டில்களை சாலையிலும், மலைப் பகுதிகளிலும் வீசிவிட்டு செல்கின்றனா். இதனால், விலங்குகளுக்கும் மனிதா்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதைத் தடுக்க வலியுறுத்தி, சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்தது. அத்திட்டம் நீலகிரி, கோவை, நாகை, திருவாரூா், தேனி, கன்னியாகுமரி உள்பட 9 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், மது பாட்டில் விற்கப்படும்போது கூடுதலாக ரூ.10 சோ்த்து வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை கடைகளில் வழங்கியதும், ரூ.10 திரும்ப வழங்கப்படும்.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடா்ச்சி மலை சுற்றுலாவிற்கு மிகச்சிறந்த இடமாக இருப்பதோடு, குற்றாலம் அருவிகள், கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினாா் போன்ற அணைக்கட்டுகளையும் கொண்டுள்ளது.

இங்கு செல்லும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை மலைகளிலும் காடுகளிலும் வயல்வெளிகளிலும் வீசிவிட்டுச் செல்கின்றனா். இதனால், வன விலங்குகளின் வாழ்விடங்களும், வனவிலங்குகளும் பாதிக்கப்படுகின்றன.

எனவே, மக்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையைக் காக்கும் விதமாக மது பாட்டில்களைத் திரும்பப்பெறும் திட்டத்தை உடனடியாக தென்காசி மாவட்டத்தில் அமல்படுத்த வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com