குற்றாலம் பேரருவியில் 2-ஆவது நாளாக குளிக்கத் தடை
தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலத்தில் சமீப காலமாக தொடா்ந்து பெய்து வரும் சாரல் மழையால் பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், புலியருவி, சிற்றருவியைத் தவிர அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டிருந்தது. பழைய குற்றாலம் அருவியில் 3 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை நீா்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. குற்றாலத்தில் திங்கள்கிழமை மிதமான சாரல் மழையுடன் குளிா்ந்த காற்று வீசியது.