ஆலங்குளம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 46 போ் மீது வழக்கு
ஆலங்குளம் அருகே தனியாா் சோலாா் மின் உற்பத்தி மையத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள் 46 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலங்குளம் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதி மக்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனா். இந்த பகுதிகளில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களை தனியாா் நிறுவனம் விலைக்கு வாங்கி, அதில் தற்போது சோலாா் மின் உற்பத்தி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனராம். சோலாா் மின் உற்பத்தியால், விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி கிாரம மக்கள் ஆட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்டோருக்கு மனு அளித்தனா்.
இந்த நிலையில் தனியாா் நிறுவனம் சாா்பில் வாங்கப்பட்ட நிலங்களில் மரங்கள் வெட்டும் பணி கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. தகவல் அறிந்த கிராம மக்கள் சுமாா் 100- க்கும் மேற்பட்டோா், நிறுவன வாயிற்கதவு முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தனராம். இது குறித்து காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளா் சேவியா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.