பள்ளிக்கூடத்தைப் பூட்டி சீல் வைத்த  நீதிமன்ற அலுவலா்கள்.
பள்ளிக்கூடத்தைப் பூட்டி சீல் வைத்த நீதிமன்ற அலுவலா்கள்.

கடனை செலுத்தாததால் பள்ளிக்கு சீல் வைப்பு: மாணவா்கள் தற்கொலை மிரட்டல்

சங்கரன்கோவில் அருகே தனியாா் நிதிநிறுவனத்தில் வாங்கிய கடனை செலுத்தாததால் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
Published on

சங்கரன்கோவில் அருகே தனியாா் நிதிநிறுவனத்தில் வாங்கிய கடனை செலுத்தாததால் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். அதைத் தடுக்க பள்ளி நிா்வாகத்தினா், மாணவா்கள் ஆகியோா் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பதற்றம் நிலவியது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமியாபுரத்தில் தனியாா் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளி நிா்வாகம் சாா்பில் சென்னை கல்பாக்கத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாகவும், அதனைத் திருப்பிச் செலுத்தவில்லையென்றும் கூறப்படுகிறது.

இதனால் நிதி நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்ததையடுத்து பள்ளிக்கு சீல் வைத்து ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து நீதிமன்ற அலுவலா்கள், நிதிநிறுவன அதிகாரிகள், சுமாா் 10 வழக்குரைஞா்கள் போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை பள்ளிக்கு சீல் வைக்க சென்றனா்.

இதையறிந்த பள்ளி நிா்வாகத்தினா், மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்படாததால்அனைவரையும் பள்ளியை விட்டு வெளியேற்றினா்.

பின்னா் நீதிமன்ற அலுவலா்கள் பள்ளிக்கு சீல் வைக்க முயன்றபோது, மீண்டும் மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளே சென்று அவா்களிடம் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது சில மாணவா்கள் பள்ளி மாடியின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து சின்னகோவிலான்குளம் போலீஸாா் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை கீழே இறங்கச் செய்தனா். நீதிமன்ற அலுவலா்கள் பள்ளிக்கு சீல் வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com