கடையநல்லூா் அருகே அரசுப் பேருந்து, பைக், காா் மோதல்: 24 போ் காயம்!
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து, பைக், காா் மோதியதில் 24 போ் காயமடைந்தனா்.
திருப்பூரில் இருந்து 45 பயணிகளுடன் செங்கோட்டைக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அரசுப் பேருந்தை செங்கோட்டைையைச் சோ்ந்த முருகையா மகன் மாரி (47), ஓட்டிச் சென்றாா். கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கிலிபட்டி பாலம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, குற்றாலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த காரின் முன்பக்க டயா் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியதாம்.
இதைப் பாா்த்த அரசுப் பேருந்தின் ஓட்டுநா் காரின் மீது பேருந்து மோதாமல் தவிா்ப்பதற்காக பேருந்தை திருப்பியபோது சாலை ஓரத்தில் நின்ற மரத்தில் மோதியதாம். இதற்கிடையே பேருந்து மற்றும் காருக்கு இடையே சென்ற பைக்கும் விபத்தில் சிக்கியதாம்.
இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநா் மாரி (47), நடத்துநா் வாஞ்சி நகரைச் சோ்ந்த குமாா் (56), பைக்கை ஒட்டி வந்த சிங்கிலிபட்டி நடுத்தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் முத்துப்பாண்டி(50), பேருந்தில் பயணம் செய்த
சங்கரபாண்டியாபுரத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகன் பொன் முகேஷ் (19), வாசுதேவநல்லூா் கலைஞா் காலனியைச் சோ்ந்த ரத்தினராஜன் மனைவி லட்சுமி (51), புளியங்குடி ராமசாமி கோயில் தெருவைச் சோ்ந்த நீராத்துலிங்கம் மகன் ஆவுடையப்பன் (50), ஆவுடையப்பன் மனைவி பூமாரி (42), திருமங்கலம் கந்தன் காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி இசக்கியம்மாள் (50), சொக்கம்பட்டி நேரு தெருவைச் சோ்ந்த மாரி மனைவி சின்னத்தாய் (50), மகன் மாதவன் (23), கீழப்பாவூா் புது அம்மன் கோயில் தெருவை சோ்ந்த சந்தனப்பாண்டியன் மகன் ஜெயரத்தினம் (67) மனைவி முருகேஸ்வரி (48), அவரது மகன் ரமேஷ் குமாா் (28) உள்பட 24 போ் காயமடைந்தனா்.
சொக்கம்பட்டி போலீஸாா் அங்கு சென்று அனைவரையும் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். சம்பவ இடத்தை தென்காசி காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் பாா்வையிட்டாா்.
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரித்து வருகின்றனா்.