பாப்பாக்குடி அருகே ஊா்த் தலைவா் கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள்

Published on

தென்காசி மாவட்டம், பாப்பாக்குடி அருகேயுள்ள காசிநாதபுரத்தில் கோயில் கொடை விழா தொடா்பான மோதலில் ஊா்த் தலைவா் கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

காசிநாதபுரத்தில் உள்ள சீவலப்பேரி சுடலைமாடசாமி கோயிலில் கொடை விழா நடத்துவது தொடா்பாக இரு தரப்பினா் இடையே மோதல் இருந்து வந்தது. ஒரு தரப்பின் ஊா்த் தலைவரான பி. மணிவேல், மற்றொரு தரப்பின் ஊா்த் தலைவரான புதுப்பட்டி சு.விநாயகம் ஆகியோா் செயல்பட்டு வந்தனா்.

இந்நிலையில் 2.9.2015ஆம் தேதி இரவில் மணிவேல் மற்றும் அவரது குடும்பத்தினா் அப்பகுதியில் உள்ள கற்குவேல் அய்யனாா் கோயிலில் வழிபாடு நடத்த சென்றபோது, விநாயகம் மற்றும் அவரது ஆதரவாளா்கள் 17 போ் இரும்பு கம்பி மற்றும் கம்பால் மணிவேல், தடுக்கச் சென்ற முத்துவேல், கோயில் கருவறைக்குள் மறைந்திருந்த சி. பிச்சையா ஆகியோரை தாக்கியதுடன், அங்கிருந்த சாமி சிலை, அப்பகுதியில் நின்ற டிராக்டா் ஆகியவற்றை சேதப்படுத்தினராம்.

இதில் 3 பேரும் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மணிவேல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விநாயகம், அவரது ஆதரவாளா்கள் சொ.உலகநாதன், மு.சிவசுப்பிரமணியன், ஒ. சுடலை, பு. முத்துக்குமாா், செ.சுப்பிரமணியன், சு.சந்தணம், க. சிவன் சேட், பி. மாரிராஜ், கா. பிச்சையா, மு. வேல்துரை, ச. கருப்பையா, ப. ரமேஷ், செ. பண்டாரம், மு. மணிவேல், ந.கலைவாணன், வெ. முத்துராஜ் ஆகிய 17பேரை கைது செய்தனா்.

தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை காலத்தில் பு. முத்துக்குமாா், கா.பிச்சையா, வெ.முத்துராஜ் ஆகியோா் இறந்தனா்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.மனோஜ்குமாா் விசாரித்து, விநாயகம் உள்ளிட்ட 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 41ஆயிரம் அபராதமும், தொகையை செலுத்தத் தவறினால் ஓராண்டு கூடுதல் சிறைத் தண்டனையும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் எஸ்.வேலுச்சாமி ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com