திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
ஆரியங்காவூா் பகுதி பொதுமக்கள், திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், திப்பணம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆரியங்காவூா், துரைச்சாமிபுரம் ஆகிய ஊா்கள் உள்ளன. 2024 மக்களவைத் தோ்தல் வரை வாக்காளா் பட்டியலில் ஆரியங்காவூா் என இருந்த ஊா் பெயா், தற்போது எஸ்ஐஆா் பணிக்காக வழங்கிய கணக்கீட்டுப் படிவங்களில் துரைச்சாமிபுரம் என்று திருத்தப்பட்டுள்ளதாம்.
ஆரியங்காவூா் என்ற பெயரை மாற்றக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஆரியங்காவூா் மக்கள் மனு அளித்தனா். பின்னா், 2 ஊா் பொதுமக்கள் கலந்துகொண்ட சமாதானக் கூட்டத்தை வருவாய்த் துறையினா் நடத்தினா்.
இந்நிலையில், ஆரியங்காவூா் மக்கள், திப்பணம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பாவூா்சத்திரம் காவல் ஆய்வாளா் டேவிட்ராஜ், உதவி ஆய்வாளா் மாரிராஜ், பட்டுராஜா, ஊராட்சி மன்றத் தலைவா் ஐவராஜா ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பின்னா், அனைவரும் கலைந்து சென்றனா்.
