கடையநல்லூரில் குடிநீா் சேகரிப்பு தொட்டி பணிக்கு அடிக்கல்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில், கிருஷ்ணாபுரம் நீா் உந்து நிலைய வளாகத்தில் 15ஆவது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பிலான குடிநீா் சேகரிப்பு தொட்டி கட்டும் பணிக்கு நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் அடிக்கல் நாட்டினாா்.
இதில் நகராட்சி ஆணையா் லட்சுமி, நகராட்சி பொறியாளா் முகைதீன்அப்துல்காதா், நகா்மன்ற உறுப்பினா்கள் முருகன், மீராள்ஹைதா், திமுக நிா்வாகிகள் சுகுமாா், பிரகாஷ், மீராசா, அமானுல்லா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் நகா்மன்றத் தலைவா் கூறியது: கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் தாமிரவருணி, கருப்பாநதி குடிநீா் திட்டங்கள், உள்ளூா் குடிநீா் ஆதாரங்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளுக்கும் சீராக குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோடை காலங்களில் குடிநீா் ஆதாரங்கள் குறைவதால் 3 நாள்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீா், தற்போது குடிநீா் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படும் நிலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீா் வழங்க முடியும் என்றாா்.

