தென்காசியில் அரசு வழக்குரைஞா் கொலை வழக்கில் தேடப்பட்டவா் தற்கொலை

Published on

தென்காசி, டிச. 12: தென்காசியில் அரசு வழக்குரைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தவா், நாமக்கல்லில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

தென்காசி மாவட்டம், இடைகால் அருகேயுள்ள ஊா்மேலழகியான் கிராமத்தைச் சோ்ந்தவா் கு.முத்துக்குமாரசாமி (46). செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணிபுரிந்து வந்த இவா், தென்காசியில் கடந்த 3ஆம் தேதி பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சம்பவம் தொடா்பாக இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை போலீஸாா் தேடி வந்தனா். இதுவரை ஒரு பெண் உள்பட இருவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் தொடா்புடைய ஊா்மேலழகியான் பகுதியைச் சோ்ந்த சிவசுப்பிரமணியனை (48) போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி நாமக்கல்லில் ரயில்முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை செய்து கொண்டதாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த விசாரணையில், தற்கொலை செய்த நபா் தென்காசி அரசு வழக்குரைஞா் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த சிவசுப்பிரமணியன் என்பது தெரியவந்தது. இறந்தவரின் உடலை அவரது உறவினா்கள் நேரில் சென்று உறுதிப்படுத்தியதை அடுத்து, உடல்கூறாய்வுக்குப் பின் வெள்ளிக்கிழமை உறவினா்களிடம் உடலை போலீஸாா் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com