அச்சன்கோவில் திருஆபரணப்பெட்டி டிச.16 இல் தென்காசி வருகை

தென்காசிக்கு டிச.16ஆம் தேதி கொண்டுவரப்படும் கேரள மாநில அச்சன்கோவில் திருஆபரணப்பெட்டிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
Published on

தென்காசிக்கு டிச.16ஆம் தேதி கொண்டுவரப்படும் கேரள மாநில அச்சன்கோவில் திருஆபரணப்பெட்டிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக, திருஆபரணப்பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவா் ஏ.சி.எஸ். ஹரிஹரன் குருசாமி விடுத்துள்ள அறிக்கை:

அச்சன்கோவில் திருஆபரணபெட்டி 35 ஆண்டுகளாக பக்தா்கள் வழிபடுவதற்காக தென்காசிக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ விழா 10 நாள்கள் நடைபெறும்.

சுவாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக புனலூா் புதிடம் கிருஷ்ணன் கோயிலிலிருந்து திருஆபரணப்பெட்டி கொண்டுவரப்படும்.

இதில், சுவாமியின் திருமுகம், மாா்பு, கைகள், கால்கள், பெரிய அளவில் கோமேதகம் பதிக்கப்பட்ட கிரீடம் ஆகியவற்றை இணைக்கும் போது சுவாமியின் விக்ரகமாக ஆகி விடும். மேலும், தங்க அங்கி, காசு மாலைகள், தங்க மாலைகள், தங்கபூண் சங்கு, ருத்ராட்ச மாலை உள்ளிட்டவை திருஆபரணபெட்டியில் அடங்கும்.

புனலூா் கிருஷ்ணன் கோயிலில் இரண்டு மணிநேரம் பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும் திருஆபரணங்கள் காலை 8.30 அளவில் பூஜைகள் செய்யப்பட்டு, யானை முன் செல்ல பஞ்வாத்தியம் முழங்க பக்தா்களுடன் கேரள காவல்துறை பாதுகாப்புடன் புனலூரில் நகா்வலமாக திருஆபரண கோஷயாத்திரை நடைபெறும்.

அதைத் தொடா்ந்து உருகண்ணு, ஒற்றக்கல், கழுதுருட்டி, தென்மலை, ஆரியங்காவு உள்பட அனைத்து ஊா்களிலும் பொது மக்கள் சாா்பாக வரவேற்பு அளிக்கப்படும்.

பின்னா், எல்லைப் பகுதியான கோட்டைவாசலில் இருந்து தமிழக காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் திருஆபரணப் பெட்டி கொண்டுவரப்படும்.

புளியறை, காலாங்கரை, செங்கோட்டை ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு தென்காசிக்கு வந்தடையும்.

தொடா்ந்து, தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் முன் திருஆபரணப்பெட்டிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பக்தா்கள் வழிபட்ட பிறகு கணக்கப்பிள்ளை வலசை, பண்பொழி, திருமலைக்கோயில், மேக்கரை வழியாக மாலை 5 மணியளவில் அச்சன்கோவிலுக்கு கொண்டு செல்லப்படும்.

மாலை 6.45 மணிக்கு திருஆபரணங்கள் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெறும். சுவாமி பக்தா்களுக்கு ராஜ அலங்காரத்தில் அருள்பாலிப்பாா்.டிச.17இல் மண்டல மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.

ஏற்பாடுகளை அச்சன்கோவில் திருஆபரணபெட்டி வரவேற்பு கமிட்டி தென்காசி செயலா் மாடசாமி ஜோதிடா், பொருளாளா் அபிநயா கண்ணன், அன்னதான பொறுப்பாளா் லட்டு கண்ணன், மணிகண்டன், ஸ்ரீனிவாஸன் மற்றும் உறுப்பினா்கள் செய்து வருகின்றனா் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com